தியேட்டருக்கு கூட்டத்தை அழைத்துவரப் போகும் 7 படங்கள் !

Published On:

| By Balaji

கொரோனா தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. ஒன்றன்பின் ஒன்றாக பல்வேறு தளர்வுகளும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இறுதியாக, திரையரங்கம் திறப்பதற்கான அனுமதிக்காக, திரையுலகமே காத்துக் கொண்டிருக்கிறது.

முதல் அலையின் போது, எப்படி தளர்வு தரப்பட்டதோ அதுபோலவே, இந்த முறையும் கட்டுப்பாடுகள் இருக்கும் என்கிறார்கள். எப்படியும், ஆகஸ்டில் தியேட்டருக்கான தளர்வு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அப்படி கிடைத்தால், 50% இருக்கை அனுமதியுடன் திரையரங்குகள் இயங்கும். பின்னர், படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படும்.

இந்த நிலையில், திரையரங்குகளுக்கு மக்கள் அச்சமின்றி வருவார்களா எனும் கேள்வி எழுகிறது. அதோடு, சின்ன பட்ஜெட் படங்களுக்கு கூட்டம் வருமா என்பதும் டிரேடிங்க் வட்டாரத்தால் கணிக்க முடியவில்லை. திரையரங்குக்கு மக்கள் கூட்டத்தை அழைத்துவர வெளியாகப் போகும் ஏழு படங்களும் கைகொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகிவரும் படம் வலிமை. விஜய்யின் மாஸ்டர் ரிலீஸில் திரையரங்கில் எப்படியான ரெஸ்பான்ஸ் கிடைத்ததோ, அப்படியான ரெஸ்பான்ஸ் வலிமைக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை விநாயகர் சதுர்த்திக்கு வெளியிடலாமா என்று திட்டமிட்டுவருகிறது படக்குழு.

வலிமையைத் தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரஜினியின் அண்ணாத்த படத்துக்கு இருக்கிறது. தமிழில் அதிக சம்பளம், அதிக கலெக்ஷன் என இரண்டிலும் ரஜினி படங்களே டாப்பில் இருக்கும். சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி, நயன் தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படம் வருகிற நவம்பர் 4ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

தமிழ் படம் இல்லையென்றாலும், தமிழ் படத்துக்கு இணையான வரவேற்பு `ஆர் ஆர் ஆர்` படத்துக்கு நிலவுகிறது. பாகுபலி எனும் பிரம்மாண்டத்தைக் கொடுத்த ராஜமெளலியின் அடுத்தப் படைப்பு இது. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். அலியா பட், அஜய்தேவ்கன் மற்றும் சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாகுபலி மாதிரியான ஒரு பிரம்மாண்ட படமாக இது உருவாகிவருகிறது. இப்படம் வருகிற அக்டோபர் 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்தியாவின் சென்சேஷனல் ஹீரோவாக இருக்கிறார் கன்னட நடிகரான யஷ் . இவரின் கே.ஜி.எஃப் சேப்டர் 2 படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் கே.ஜி.எஃப் சேப்டர் 1 படமானது டிசம்பர் 2018-ல் வெளியானது. தமிழ் வெர்ஷனுக்கு நிழல்கள் ரவியின் குரல் மிகப்பெரிய பலமாக அமைந்திருந்தது. கன்னடம், தெலுங்கு, மலையாளம் இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் படமும் மிகப்பெரியளவில் ஹிட்டானது. இந்நிலையில், படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருடம் வெளியாக இருக்கிறது. இப்படமானது, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

சிம்பு நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்க உருவாகிவரும் படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் படம் உருவாகிவருகிறது. இந்தப் படத்துக்காக பிரம்மாண்டமான அரசியல் மாநாடு செட் அமைத்து ஆயிரக்கணக்கான ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் நடிக்க படப்பிடிப்பு நடந்தது. இந்தப் படத்தில் முஸ்லீம் இளைஞராக சிம்பு நடித்திருக்கிறார். 24 மணிநேரத்தில் நடப்பது மாதிரியான கதைக்களம். இந்தப் படம் முழுமையாக முடிந்து, ரிலீஸூக்கான தேதியை எதிர்நோக்கிவருகிறது . திரையரங்க அனுமதி கிடைத்தது ‘மாநாடு’ திரையரங்கில் கூட்டப்படும்.

மாஸ்டர் படத்தைக் கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில், அர்ஜூன் தாஸ், நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘விக்ரம்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியிருக்கிறது. இந்த வருடத்துக்குள் படத்தை முடித்து வெளியிட வேண்டுமென்பதே படக்குழுவின் திட்டம். இந்தியன் 02 சிக்கல் தீர்ந்தால், விக்ரம் விரைவில்…!

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் படம் பீஸ்ட். இந்தப் படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் ஜார்ஜியாவில் முடிந்துவிட்டது. இரண்டாம் கட்ட ஷூட்டிங் சென்னையில் நடந்துவருகிறது. இன்னும் ஓரிரு மாதத்தில் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும். சன்பிக்சர்ஸின் அண்ணாத்த தீபாவளிக்கு வருவதால், விஜய்யின் பீஸ்ட் படத்தை இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

**- தீரன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share