பண மோசடி… மறுத்த விமல்: ஆதாரங்களை வெளியிட்ட திரையரங்க உரிமையாளர்!

Published On:

| By Balaji

சில தினங்களுக்கு முன்பு நடிகர் விமல் மீது பண மோசடி குற்றச்சாட்டு ஒன்றை வைத்தார் திரையரங்க உரிமையாளர் திருநாவுக்கரசு.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், பணத்தைத் திருப்பித் தராமல் தன்னை ஏமாற்றியதாகக் கண்ணீர் மல்கக் கூறியிருந்தார்.

விமல் மீதான பண மோசடி தொடர்பாக திமுக தலைவருக்கு திருநாவுக்கரசு எழுதிய கடிதத்தில்,  

“‘மன்னர் வைகையறா’ படத்தை தயாரிக்க என் வீட்டை அடமானம் வைத்து விமலுக்குப் பணம் கொடுத்தேன். நான் கொடுத்த பணத்திற்கு ஈடாக ரூ 80 லட்சத்திற்கு காசோலையும் (இந்தியன் வங்கி காசோலை எண் : 076759, கோடம்பாக்கம் கிளை) கொடுத்தார். படப்பிடிப்பு முடிந்த பிறகு அவர் சொன்ன தேதியில் வங்கியில் காசோலையைச் செலுத்தியபோது, போதிய பணமில்லாமல் காசோலை திரும்பிவிட்டது. இதுகுறித்து பலமுறை முறையிட்டும் இதுவரை என் பணத்தை திருப்பித்தரவில்லை. கடன் கொடுத்தவர்கள் என்னை நெருக்கியதால் வேறு வழியின்றி என்னுடைய வீட்டை விற்று கடனை அடைத்தேன். நடிகர் விமலுக்கு உதவப்போய் இன்றைக்கு நடுத்தெருவில் நிற்கிறேன். நடிகர் விமலால் என் குடும்பம் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து விட்டது. இந்நிலையில் நடிகர் விமலின் மனைவி பிரியதர்ஷினி மணப்பாறையில் திமுக சார்பில் போட்டியிடப் போவதாக வந்த செய்தியைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

“ஸ்டாலின் தான் வாராரு, விடியல் தரப் போறாரு ” என என்னைப் போன்றவர்கள் நம்பிக் கொண்டிருக்கும் வேளையில், மோசடியின் மொத்த உருவமாய் திகழும் நடிகர் விமலுக்கு தாங்கள் சீட் கொடுக்க இருப்பதாக வரும் தகவல் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சுவது போல் உள்ளது. இவரைப் போன்றவர்களால் கழகத்திற்கு கெட்ட பெயர்தான் வரும் என்பதை தெரிவிப்பதற்காகவே தங்களுக்கு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளேன். என் மீது பிழையிருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும்” என்று [குறிப்பிட்டுள்ளார்](https://minnambalam.com/entertainment/2021/03/04/44/theatre-owner-against-vimal-and-letter-to-dmk-leader-stalin).

 

திரையரங்க உரிமையாளர் திருநாவுக்கரசு குறிப்பிட்டிருந்த இந்தக் குற்றச்சாட்டுக்கு விமல் பதிலளித்திருந்தார். அவர் குறிப்பிடும்போது, தன்னுடைய வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ளமுடியாத சிலர் செய்யும் சதிவேலை இது. தவறான தகவல்களை இப்படிப் பரப்பிக் கொண்டிருப்பதால் மிகுந்த மனவேதனையில் இருக்கிறேன் என்று கூறினார். தன்னை ஏமாற்றி பணம் பறிக்கப் பலர் முயற்சி செய்வதாகவும், குற்றம் கூறிய  அந்த நபருக்கு எதிராக மானநஷ்ட வழக்கு நீதிமன்றத்தில்  தொடர இருப்பதாகவும் திட்டமிட்டிருக்கிறாராம் விமல்.

இந்நிலையில்,   விமல் அளித்த பதிலுக்குத் தகுந்த பதிலடியாக, தன்னிடம் இருக்கும் ஆதாரங்களை வெளியிட்டுள்ளார் திருநாவுக்கரசு.  இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நடிகர் விமலால் நான் மோசம் செய்யப்பட்டது குறித்து திமுக தலைவருக்கு நான் கடிதம் அனுப்பி அது அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வெளிவந்தது. இந்நிலையில் அதனை மறுக்கும் விதமாக நடிகர் விமல் வெளியிட்டுள்ள அறிவிப்பில் என்னுடன் எந்தவித பணப்பரிவர்த்தனையிலும் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளார். இது எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.

2016 ஆம் ஆண்டு ” மன்னர் வகையறா ” படத்தின் படப்பிடிப்பு பட்டுக்கோட்டையில் நடந்த சமயத்தில் தயாரிப்பு பணிகளைத் தயாரிப்பு மேலாளர் சேது என்பவரும், விமலின் உதவியாளர் சாரதி என்பவரும் மேற்கொண்டனர். விமல் கேட்டுக்கொண்டதற்காகக் கடனாக அவருக்கு நான் பணம் கொடுத்ததை இருவரும் நன்கு அறிவார்கள். விமலின் வேண்டுகோள்படி சாரதி என்னுடைய திரையரங்கிற்கு வந்து பணம் பெற்று செல்வார். சில சமயங்களில் நான் விமலிடமே நேரடியாகப் பணத்தைக் கொடுத்திருக்கிறேன். விமல் மீதிருந்த நம்பிக்கையால் என்னுடைய டைரியில் கையொப்பம் வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுத்தேன்.

சாரதி மற்றும் விமல் இருவருமே என் டைரியில் கையொப்பமிட்டுள்ளார்கள். என்னுடைய டைரியை எந்த விசாரணைக்கும் காட்டுவதற்கு நான் தயாராக இருக்கிறேன். முழு பூசணிக்காயை ஒரு பருக்கை சோற்றில் மறைக்க முயல்வது போல என்னிடம் பணம் வாங்கியதை மறைக்கவும், என்னை ஏமாற்றவும் விமல் முயற்சிக்கிறார். இது ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல. விமலுக்கு கடனாகப் பணம் கொடுத்து இக்கட்டான சூழ்நிலையிலிருந்து அவரை நான் காப்பாற்றினேன். விமல் தங்கியிருந்த பட்டுக்கோட்டை பண்ணை வீட்டில் கதாநாயகியுடன் அடிதடி மோதல் நடந்து அதன் பிறகு கதாநாயகி விமலுடன் நடிக்க முடியாது என்று கூறியதை நான் வெளியில் சொன்னால் விமலுக்கு தான் அசிங்கம்.

பத்தொன்பது நாள் படத்தில் நடித்த கதாநாயகி அந்த சம்பவத்திற்குப் பிறகு விமலுடன் நடிக்க முன்வரவில்லை. இதனால் வேறுவழியின்றி 1.8 கோடி செலவு செய்து எடுத்த படத்தை தூக்கிப் போட்டுவிட்டு, கதாநாயகியாக ” கயல் ” ஆனந்தியை ஒப்பந்தம் செய்து மறுபடியும் அதே காட்சிகளை, அதே வசனத்தோடு எடுத்தனர். இது தான் “மன்னர் வகையறா” படத்தின் பட்ஜெட் எகிறியதற்குக் காரணம். இதையெல்லாம் நான் வெளியில் சொன்னால் விமலின் மானம் கப்பல் ஏறிவிடும் என்பதால் அவரின் நலன் கருதி அமைதி காக்கிறேன்.

ஆனால் விமல் என் மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடருவேன் என்பது காமெடியாக உள்ளது. 2016 ஆம் ஆண்டு அவர் கொடுத்த காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பிய போது, என் குடும்பத்தாரும், நண்பர்களும் வழக்கு தொடுக்கச் சொன்னபோது, நட்பின் காரணமாக நான் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக விமலை அணுகி பணத்தை திருப்பித் தரும்படி கேட்டேன். அவரும் பட வெளியீடு சமயத்தில் தன்னை சந்தித்து பணம் பெற்று கொள்ளும்படி கூறினார்.

” மன்னர் வகையறா ” படம் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட சமயத்தில் அவரை சந்தித்தேன். ஜனவரி 23 ஆம் தேதி ரூ.35 லட்சம் தருவதாகவும், பின்னர் பிப்ரவரி 7 ஆம் தேதி ரூ.45 லட்சம் தருவதாகவும், அதனை நீங்களே என்னுடைய வங்கி கிளைக்குச் சென்று RTGS செய்து கொள்ளுங்கள் என்று கூறி காசோலைகளையும், RTGS செய்வதற்கான வங்கி படிவங்களையும் வழங்கினார். ஆனால் 23 ஆம் தேதி நான் வங்கிக்குச் சென்ற போது விமல் கணக்கில் பணம் இல்லை என்று கூறி திருப்பி அனுப்பி விட்டனர். விமலை தொடர்பு கொண்ட போது ஒரு வாரம் கழித்து வங்கிக்குச் செல்லுங்கள் என்று கூறினார். ஆனால் மறுபடியும் ஏமாற்றம் தான் மிஞ்சியது.

மனம் தளராமல் மறுபடியும் விமலை தொடர்பு கொண்ட போது ” களவாணி -2 ” படப்பிடிப்பில் இருப்பதாகவும், படப்பிடிப்பு முடிந்து சென்னை வந்தவுடன் அழைப்பதாகவும் கூறினார். ஆனால் விமலிடம் இருந்து எந்தவித அழைப்பும் வரவில்லை. இந்த அறிக்கையோடு விமல் பணம் பெறும் போது கையெழுத்திட்ட டைரியின் பக்கத்தையும், RTGS செய்வதற்காக விமல் கொடுத்த ஆவணங்களையும் இணைத்துள்ளேன். எந்த விசாரணைக்கும் டைரியுடன் ஆஜராக நான் தயார். விசாரணையைச் சந்திக்க விமல் தயாரா?” என்று கூறியுள்ளார்.

மன்னர் வகையறா படத்துக்காக நிஜத்தில் விமல் பணம் வாங்கிக் கொண்டு திருப்பித் தரவில்லையா அல்லது அந்த நபர் தவறான தகவலைப் பரப்புகிறாரா என்பதெல்லாம் வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தால் தெரிந்துவிடும்.

சற்குணம் இயக்கத்தில் களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் விமல்.  கிராமம் சார்ந்த பல படங்களில் நடித்திருக்கிறார். பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் தயாரித்து , நடித்து 2018ல் வெளியான  ‘மன்னர் வகையறா’ படம் தான் இந்த சர்ச்சைக்கெல்லாம் காரணம்.  தற்பொழுது, விமல் கைவசம் இரண்டு படங்கள் இருக்கிறது. ஒன்று, சக்தி இயக்கத்தில் தன்யாவுடன் நடிக்கும் ‘குலசாமி’ படம் தயாராகிவருகிறது. மற்றொன்று, வீரா இயக்கத்தில் சிங்கிள் ஷார்ட் ஃபிலிமிலும் நடிக்க இருக்கிறார் விமல்.

**-ஆதினி**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share