தமிழின் சூப்பர் ஸ்டார் நடிகரான ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் 168வது படம் ‘அண்ணாத்த’. வீரம், விவேகம், வேதாளம் மற்றும் விஸ்வாசம் என அஜித்துக்கு நான்கு ஹிட் கொடுத்த சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வருகிறார். சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் டி.இமான் இசையமைப்பில் படம் தயாராகி வருகிறது.
கொரோனா முதல் அலை துவங்குவதற்கு முன்பு ‘அண்ணாத்த’ துவங்கியது. அப்போதே, 60% படப்பிடிப்பை படக்குழு முடித்துவிட்டது. மீதிப் படப்பிடிப்புக்காக கடந்த டிசம்பரில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு துவங்கியது. ஆனால், படக்குழுவில் ஏற்பட்ட தொற்றுக் காரணமாக படப்பிடிப்புத் தள்ளிப் போனது. இறுதியாக, கடந்த மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்கி முக்கால் பாக படப்பிடிப்பு முடிந்துவிட்டது. குறிப்பாக, ரஜினிக்கான பெரும்பாலான காட்சிகளை முடித்துவிட்டது. அண்ணாத்த ஷூட்டிங் முடியும் போது கொரோனா இரண்டாம் அலை தீவிரமானது.
இந்தப் படத்தின் 90% படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், இறுதிக் கட்ட ஷூட்டிங்கிற்காக கொல்கத்தா செல்ல இருந்தது படக்குழு. ரஜினியும் இந்த ஷூட்டிங்கில் கலந்துகொள்ள இருந்தார். கொல்கத்தா செல்வதற்கான முழுமையான திட்டமும் தயார் நிலையில் இருந்தது. ஆனால், படக்குழு கொல்கத்தா செல்லவில்லை என்பதே உண்மை.
கொரோனா அச்சுறுத்தல் நிலவுவதால் கொல்கத்தா செல்ல அனைவருமே தயக்கம் காட்டியிருக்கிறார்கள். குறிப்பாக, ரஜினிக்கு கொல்கத்தா செல்வதில் விருப்பமில்லை என்றே தெரிகிறது. இறுதியாக, சென்னையிலேயே படப்பிடிப்பை நடத்திவருகிறார்கள்.
சென்னை வடபழனியில் இருக்கும் ஃபோரம் மாலின் கார் பார்க்கிங் பகுதியில் கார் சேசிங் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள். அதோடு, சன் டிவி அலுவலகத்திலும் சில பேட்ஜ் ஒர்க் காட்சிகள் படமாக்கியிருக்கிறார்கள். இவ்விரண்டு ஷூட்டிங்கிலும் ரஜினியும் கலந்துகொண்டாராம்.
படத்தை சென்னைக்குள்ளேயே முழுமையாக முடித்துவிடுவார்கள் என்றே தெரிகிறது. அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகைக்கு நவம்பர் 4ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
கிராமத்தில் நடக்கும் கதையாகப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சிவா. படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.
**- ஆதினி**
�,