கொரோனா மற்றும் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கருக்கு கடந்த சில வாரங்களாக மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இதையொட்டி இரண்டு நாட்களுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. லதா மங்கேஷ்கர் மறைவுக்கு சினிமா, அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் மூன்று பாடல்கள் மட்டுமே பாடியுள்ள லதா மங்கேஷ்கர் தமிழகத்தில் மறைந்த சிவாஜி கணேசன் குடும்பத்தாருடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். லதா மங்கேஷ்கரை விட சிவாஜி கணேசன் ஒரு வயது மூத்தவர். இருவரும் சம காலத்து கலைஞர்கள் என்பதால், சிவாஜி கணேசன், லதா மங்கேஷ்கர் இடையே நல்ல நட்புறவு இருந்துள்ளது. சிவாஜி கணேசனின் ஒவ்வொரு பிறந்த நாளையொட்டி (அக்டோபர் 1) லதா மங்கேஷ்கர் வாழ்த்து சொல்ல தவறியது இல்லை.
கடந்த ஆண்டு லதா மங்கேஷ்கர் தனது சமூக வலைதளப் பதிவில், ‘நேற்று சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாள். நான் அவரை அண்ணா என்றுதான் எப்போதும் அழைப்பேன். அவர் இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற பொக்கிஷம். அவர் என்னை தங்கையாக ஏற்றுக் கொண்டதை நான் பெற்ற பாக்கியமாக கருதுகிறேன். அவரது மகன்கள் ராம்குமார் மற்றும் பிரபு, அவர்களது சகோதரிகள் என்மீது மிகுந்த அன்பு வைத்துள்ளனர். அவர்களின் வழியே நான் சிவாஜி அண்ணனும், கமலா அண்ணியும் என்னுடன் இருப்பதை உணர்கிறேன். சிவாஜி கணேசன் என்ற இந்த மாபெரும் கலைஞருக்கு எனது கூப்பிய கரங்களுடன் எனது பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது வைரலாகியுள்ளது.
மேலும், சிவாஜி உயிருடன் இருந்த காலம் வரை லதா மங்கேஷ்கர் சென்னை வரும்போதெல்லாம் சிவாஜி வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினரை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இவர்களின் அண்ணன் – தங்கை உறவு அந்த அளவுக்கு பாசப்பிணைப்புடன் இருந்துள்ளது.
இந்த நிலையில் லதா மங்கேஷ்கரின் மறைவு குறித்து சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் கூறியதாவது, “அனைவருக்கும் வருத்தமான நாள். பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் நம்மை விட்டு போய்விட்டார். இப்போது நடிகர் திலகத்துடன் இருப்பதாக நினைக்கிறேன். அண்ணனும் தங்கையும் ஒன்றாக இருக்கின்றனர் என்றே நினைக்க முடிகிறது. இன்னும் நீண்ட காலத்துக்கு அவர்களின் குரல்கள் நம் மனது மற்றும் நினைவில் இருக்கும். அவரை மறக்கவே முடியாது” என்றார்.
தமிழ் சினிமாவில் லதா மங்கேஷ்கர் பாடிய மூன்று பாடல்களும் இளையராஜா இசையில் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவையொட்டி இளையராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது, “இந்திய திரைப்பட இசை உலக வரலாற்றில் கடந்த 60, 70 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய தெய்வீக, காந்தர்வ குரலால் உலக மக்களை எல்லாம் மயக்கி தன் வசத்தில் வைத்திருந்த லதா மங்கேஷ்கர் அவர்கள் மறைவு என்னுடைய மனதில் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வேதனையை எப்படி போக்குவேன் என்பது எனக்கு தெரியவில்லை. அவருடைய இழப்பு இசை உலகத்திற்கு மட்டும் அல்ல, இந்த உலகிற்கே மாபெரும் இழப்பாகும் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அவரை இழந்து தவிக்கும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தன் இசையால் மொழிகளைக் கடந்து இதயங்களை தன்வசப்படுத்தியவர் இசைக் குயில் லதா மங்கேஷ்கர். கேட்கும்தோறும் நினைவடுக்குகளில் உணர்ச்சிகள் ஊற்றெடுக்கும் ஆயிரக்கணக்கான பாடல்களைக் காற்றில் கலந்துவிட்டுச் சென்றிருக்கிறார். நான் நடித்த தமிழ்ப் படங்களிலும், இந்திப் படங்களிலும் காலத்தால் அழியாத பாடல்களைப் பாடியிருக்கிறார் என்பதெனக்குப் பெருமை. இந்தூர் தந்த இசையரசிக்கு அஞ்சலிகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள இரங்கல் வீடியோவில், “இது நம் அனைவருக்கும் மிகவும் சோகமான ஒரு நாள். லதா மங்கேஷ்கர் போன்ற ஒருவர் பாடகர் மட்டுமல்ல, அவர் ஓர் அடையாளம். அவர் இந்தியாவின் ஆன்மாவின் ஒரு பகுதியாக இருந்தார். இந்துஸ்தானி இசை, உருது, ஹிந்தி மற்றும் பெங்காலி போன்ற பல மொழிகளில் அவர் பாடியிருக்கிறார். இந்த வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவருடனான நினைவு என் அப்பாவிடம் என்னை கொண்டு செல்கிறது. நான் சிறுவனாக இருந்தபோது என் அப்பா இறந்து போனார். அவரது படுக்கையின் அருகில் லதா மங்கேஷ்கரின் புகைப்படம் ஒன்று இருக்கும். அவர் காலையில் எழும்போது அவரது முகத்தைப் பார்த்தபடியே எழுவார். இது அங்கிருந்துதான் தொடங்கியது. அவரோடு சில பாடல்களை பதிவு செய்தது, அவரோடு சேர்ந்து பாடியது என்னுடைய பாக்கியம். மேடையில் பாடுவதை பற்றிய மிக முக்கியமான விஷயங்களை நான் அவரிடமிருந்து தான் கற்றுக்கொண்டேன்” என்று கூறியுள்ளார்.
**-இராமானுஜம்**
சமூக வலைதளத்தில் வைரலாகும் லதா மங்கேஷ்கரின் பதிவு!
Published On:
| By admin

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel