தமிழிலிருந்து மற்ற மொழிக்கோ அல்லது மற்ற மொழியிலிருந்து தமிழுக்கோ படங்கள் ரீமேக்காவது வழக்கம். ஆனால், சமீபத்தில் மற்ற மொழியிலிருந்து தமிழுக்கு பல படங்கள் ரீமேக் ஆகிறது. அப்படி, தமிழுக்கு வந்திருக்கும் மிக முக்கிய திரைப்படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’.
மலையாளத்தில் ஜியோ பேபி இயக்கத்தில் சுராஜ் வெஞ்சரமூட் மற்றும் நிமிஷா சஜயன் நடிப்பில் உருவான படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. திரையரங்கில்கூட வெளியாகாவில்லை. நேரடியாக ‘நீ ஸ்ட்ரீம்’ எனும் ஓடிடியில் கடந்த ஜனவரி 15இல் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம்தான் தமிழில் ரீமேக்காகிறது. இந்தப் படத்தை இயக்குநர் கண்ணன் இயக்க இருக்கிறார். இந்தப் படத்துக்கான உரிமையைக் கைப்பற்ற பெரிய போட்டியே நடந்தது. அதற்கு நடுவே படத்தின் உரிமையைக் கைப்பற்றியிருக்கிறார்.
படத்தில் நடிக்க இருக்கும் நாயக, நாயகிகள் குறித்த அறிவிப்பு விரைவிலேயே வெளியாகும் என எதிர்பார்க்கலாம். ஏனெனில், நடிகர்களிடம் பேச்சுவார்த்தையை துவங்கிவிட்டதாம் படக்குழு. தற்போது, தெலுங்கில் ஹிட்டான ‘நின்னுக்கோரி’ படத்தின் தமிழ் ரீமேக்கான ’தள்ளிப் போகாதே’ படத்தின் பணிகளில் இருக்கிறார் இயக்குநர் கண்ணன். இந்தப் படத்தை முடித்துவிட்டு, சூடாக ‘தி கிரேட் இந்தியன் கிச்சனை’ சமைக்க இருக்கிறார். ஏன் ரீமேக் என விசாரித்தால், படம் பார்த்த உடனடியாக இயக்குநர் கண்ணனின் உள்ளுக்குள் இந்தக் கதை ஓட ஆரம்பித்துவிட்டதாம். உடனடியாக, இதை தமிழுக்கு மாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். இதை சமீபத்திய நேர்காணலில்கூட குறிப்பிட்டிருந்தார்.
சரி, என்ன கதை? நடன ஆசிரியராக இருக்கும் நாயகி திருமணமாகி கேரளத்தின் அனைத்துப் பாரம்பரியமும் பொருந்திய வீட்டுக்கு மருமகளாக வருகிறார். பள்ளி ஆசிரியரான கணவருக்கும், வீட்டில் இருக்கும் மனைவிக்கும் நடுவிலான இந்தச் சமூகம் கட்டமைத்திருக்கும் வாழ்க்கையை அப்படியே படமாக்கியிருக்க்கிறார்கள். காலம் காலமாக இந்திய பெண்களின் வலியை, பெண்களின் மீது திணிக்கப்படும் ஆணாதிக்கத்தை, உழைப்பு சுரண்டலை அழுத்தமாகப் படம் பேசுகிறது. மருமகளாக நிமிஷா, காலை எழுந்ததும் காபி போடுவதில் துவங்கி உணவு தயாரிப்பது, துணி துவைப்பது, இரவு கணவருடன் தாம்பத்யம் வரை அந்த வீட்டின் அங்கமாகிறார். எந்த அளவுக்கு என்றால், அந்த வீட்டின் கதவு, ஜன்னல், தூண் போல இவரும் ஒருவராக மாறிப்போகிறார். இப்படியானவர், இந்த சமூக கட்டமைப்புக்குள்ளிருந்து வெளியேறினாரா இல்லையா என்பதே கதை.
மிக முக்கியமான சினிமா. பெண் சுதந்திரம், பெண் விடுதலை எனப் பேசுகிறோமே தவிர எதுவும் மாறவில்லை என்பதை உரக்கப் பேசும் இந்த சினிமா தமிழுக்கு வருவது வரவேற்கத்தக்கதே. ஆனால், ஒரு சிக்கல் இருக்கிறது. பொதுவாக படங்களெல்லாம் நேட்டிவிட்டி சார்ந்து எடுக்கப்படும் போதுதான், ரசிகர்கள் மனதுக்குள் உணர்வுப்பூர்வமாக இணைந்துவிடுகிறது. அதனால், பட படங்களை ரீமேக் செய்யும்போது படத்தின் உணர்வைக் கெடுத்துவிடும். அப்படி, பல பர்னிச்சர்களை தமிழ் சினிமா உடைத்திருக்கிறது. அந்த வரிசையில், இதையும் உடைக்காமல் ரசிகர்களுக்குக் கரை சேர்த்தாலே போதும்!
**- ஆதினி**�,