குறைவான நேரத்தில் குறைந்த பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுத்துக் கொடுப்பதில் ஸ்பெஷலிஸ்ட் சுசீந்திரன். கொரோனா லாக்டவுன் நேரத்தில் இரண்டு படங்களை முடிச்சார் . அப்படி, தயாராகி வெளியான திரைப்படம் தான் ஈஸ்வரன். சிம்பு நடிப்பில் இந்த பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 14ஆம் தேதி வெளியானது. இந்த படம் மாதிரியே, மற்றுமொரு படமும் சுசீந்திரனுக்கு தயாராக இருக்கிறது.
ஜெய் ஹீரோவாக நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் அது. இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் அறிவிக்கப்படவில்லை. ஜெய்யுடன் பாரதிராஜா, ஹரீஷ் உத்தமன், ஸ்ம்ரிதி வெங்கட், துவ்யா துரைசாமி, காளிவெங்கட், பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வேல்ராஜ் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார். சொல்லப் போனால், ஈஸ்வரன் படத்துக்கு முன்பாகவே முடிந்துவிட்ட படம் இதுதான்.
இந்தப் படத்தை குறுகிய நேரத்துக்குள் முடித்துக் கொடுத்ததனால் பல நடிகர்களின் கவனம் சுசீந்திரன் மீது பட்டது. அப்படி, ஜெய் மூலமாக சுசீந்திரனை சந்தித்தார் சிம்பு. அப்படித்தான், ஈஸ்வரன் படமே உருவானது. ஈஸ்வரன் படம் உருவாக காரணமே இந்தப் படம் தான்.
தற்பொழுது, சுசீந்திரன் – ஜெய் காம்போவில் உருவாகியிருக்கும் படமும் முழுமையாக முடிந்துவிட்டது. ரிலீஸ் செய்யலாம் என்ற திட்டத்தில் இருக்கும் போதுதான், கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்துள்ளது. திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையினாலும், சுசீந்திரனின் முந்தைய பட வசூலையும் மனதில் கொண்டு, நேரடியாக ஓடிடியில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம். அப்படி, இந்த படம் நேரடியா ஜீ5 ஓடிடியில் வெளியாக இருக்கிறது.
இதுபோக, ஜெய் – சுசீந்திரன் கூட்டணியில் மற்றுமொரு படமும் உருவாகிவருகிறது. `சிவ சிவா` எனும் பெயருடன் உருவாகிவரும் படமானது ஜெய் நடிப்பில் உருவாகிவரும் 30வது படம். தமிழ்ல ஜெய்யும், தெலுங்கில் ஆதியும் நடிக்க பைலிங்குவலாக உருவாகிவருகிறது. இந்த படமும் எப்பொழுது ரிலீஸ் என்பது குறித்த அறிவிப்பையும் விரைவில் எதிர்பார்க்கலாம்.
**- ஆதினி**
.�,