சல்மான்கானுடன் சிவகார்த்திகேயன்: போட்டியும் வாழ்த்துகளும்!

Published On:

| By Balaji

சல்மான்கான் நடித்துள்ள தபாங் 3 திரைப்படமும் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகவிருக்கும் நிலையில் இருவரும் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘ஹீரோ’. பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க அர்ஜுன், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் வரும் டிசம்பர் 20-ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

அதே நாளில் சல்மான்கான், சோனாக்‌ஷி சின்ஹா நடிப்பில் உருவாகியிருக்கும் தபாங் 3 திரைப்படமும் வெளியாகவுள்ளது. பிரபு தேவா இயக்கியுள்ள இந்தத் திரைப்படம் இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இந்தத் திரைப்படத்தையும் கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தமிழில் வெளியிடுகிறது. முன்னதாக ஹீரோ திரைப்படத்தின் டீசரை சல்மான்கான் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகி போட்டி போடவிருக்கும் நிலையில், கேஜேஆர் ஸ்டூடியோஸின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

வீடியோவில் இரு திரைப்படங்களின் கதாநாயகர்களும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். சிவகார்த்திகேயன் சல்மான்கானிடம், ‘நான் நிஜமான ஹீரோவுடன் நிற்கிறேன். எங்கள் படத்தின் டீசரை நீங்கள் வெளியிட்டதற்கு மனமார்ந்த நன்றிகள். தபாங் 3 திரைப்படத்தைத் தமிழில் பார்ப்பதற்கு நாங்கள் மிகுந்த உற்சாகமாக இருக்கிறோம். ஜல்லிக்கட்டு காளை ரெடி என்று நீங்கள் குறிப்பிட்டிருந்தது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்தது’ என்று கூறினார்.

தொடர்ந்து சல்மான்கான், ‘இதை உங்கள் படம் என்றோ, எங்கள் படம் என்றோ கூற இயலாது. இது நமது படம். ரசிகர்கள் இரு படங்களையும் பார்த்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share