ஆனந்தி கதாநாயகியாக நடித்துள்ள ‘கமலி ஃப்ரம் நடுக்காவேரி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
ராஜசேகர் துரைசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் பெண் கல்வியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஆனந்தி முதன்மை வேடத்தில் நடித்து நேற்று (மார்ச் 14) வெளியான ‘கமலி ஃப்ரம் நடுக்காவேரி’ படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.
இந்த டீசரை நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். பள்ளிப்பருவ சேட்டைகள், கல்லூரிக்கால கனவுகள் போன்றவற்றை விளக்குவதாகத் திரைப்படம் அமையும் என்பது டீசரின் மூலமாகத் தெரிகிறது.
‘பொட்ட புள்ள படிச்சு என்னத்த கிழிக்கப் போகுது?’ என்று டீசரில் இடம்பெறும் வசனம் பெண் கல்வி குறித்த பெரும் கேள்வியை முன்வைப்பதாக உள்ளது. டீசரின் இறுதியில் இடம்பெறும், ‘பொட்ட புள்ளன்னு படிக்க வைக்க யோசிச்சேன். இன்னிக்கு நடுக்காவேரிக்கு கமலிதான் அட்ரஸ்’ என்னும் வசனம் அந்த கேள்விக்கு விடையளிப்பதாகவும், பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்துவதாகவும் உள்ளது.
தீனா தயாளன் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படம் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”