ஐபிஎல்: பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்ற ஹைதராபாத்!

Published On:

| By Balaji

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று (ஏப்ரல் 21) இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றுள்ளது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்.

ஐபிஎல்லின் 13ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. வழக்கம்போல தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், அகர்வால் களம் இறங்கினர். கே.எல்.ராகுல் 4 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஷ்வர் குமார் பந்து வீச்சில் வெளியேறினார்.

அடுத்ததாக கெய்ல் – அகர்வால் ஜோடி நிதானமாக ஆடியது. பஞ்சாப் 39 ரன்கள் எடுத்திருந்தபோது அகர்வால் 22 ரன்னில் வெளியேறினார். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்ட இழந்தனர். கிறிஸ் கெய்ல் 15, பூரன் 0, தீபக் ஹூடா 13, ஹென்ரிக்ஸ் 14, ஆலன் 6 ரன்கள் எடுத்து வெளியேறினர்.

பஞ்சாப் அணியில் இடம் பெற்றுள்ள பூரன் நான்கு ஆட்டங்களில் மூன்று ஆட்டங்களில் ரன் எதும் எடுக்காமல் ஆட்டம் இழந்துள்ளார். பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ஷாருக் கான், அகர்வால் 22 ரன்கள் எடுத்திருந்தனர். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 120 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் கலீல் அஹமது 3 விக்கெட்டுகளும் அபிஷேக் சர்மா 2 விக்கெட்டுகளும் சித்தார்த் கவுல், ரஷித் கான், புவி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 121 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் பேர்ஸ்டோ சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். 10.1 ஓவரில் 73 ரன்கள் எடுத்திருக்கும்போது ஹைதராபாத் முதல் விக்கெட்டை இழந்தது. வார்னர் 37 பந்தில் 37 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

இரண்டாவது விக்கெட்டுக்கு பேர்ஸ்டோ உடன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தது. ஆடுகளம் ஸ்லோவாக இருந்தாலும் விக்கெட்டை இழக்கவில்லை. குறைந்த இலக்கு என்பதால் வெற்றியை நோக்கி சென்றனர்.

16 ஓவரில் 100 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நான்கு ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது. 17ஆவது ஒவரில் நான்கு ரன்கள் அடித்தது. கடைசி 3 ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. 18வது ஓவரில் 7 ரன்கள் அடித்தது. கடைசி 2 ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது.

19ஆவது ஓவரில் பேர்ஸ்டோ ஒரு சிக்ஸ் விளாசினார். இதனால் 18.4 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் வெற்றி பெற்றது. பேர்ஸ்டோவ் 63 ரன்களுடனும், கேன் வில்லியம்சன் 19 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் ஹைதராபாத் அணி விளையாடிய நான்கு போட்களில் முதல் வெற்றியை ருசித்துள்ளது.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share