இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்குச் சென்றுள்ளது. அதே சமயம் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஆடுவதற்காக ஷிகர் தவான் தலைமையில், ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் உருவாக்கப்பட்ட இரண்டாம்தர இந்திய அணி இலங்கைக்குப் பயணித்துள்ளது.
இதன்படி இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது ஆட்டம் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று (ஜூலை 18) மாலை தொடங்கியது.
போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனகா பேட்டிங் தேர்வு செய்த நிலையில், இலங்கை தொடக்க ஆட்டக்காரர்களான அவிஷ்கா (32) மற்றும் மினோத் (27) ஓரளவு அடித்து ஆடி ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன் பின்பு ஆடிய பனுகா 24 ரன்களுக்கும், தனஞ்ஜெயா 14 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
இதனால், இலங்கை அணி 25 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்து திணறியது. எனினும், அடுத்து விளையாடிய சரித் 38, தசுன் சனகா 39 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். வனின்டு 8 ரன்களில் வெளியேறினார்.
சமிகா கருணாரத்னே அதிரடியாக விளையாடி 2 பவுண்டரிகள், 1 சிக்சர் அடித்து 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இசுரு 8 ரன்களில் ஆட்டமிழந்தார். சமிகாவுடன் இணைந்து ஆடிய துஷ்மந்தா சமீரா 13 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து இலங்கை 262 ரன்களை எடுத்திருந்தது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ், தீபக் சஹர் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் தலா இரண்டு விக்கெட்டுகள், குருணல் பாண்ட்யா மற்றும் ஹர்தீக் பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இந்திய அணி வெற்றி பெற 263 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான பிருத்வி ஷா 43 ரன்களில் பெர்னாண்டோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஷிகர் தவான் அதிரடி ஆட்டம் வெளிப்படுத்தினார்.
இஷான் கிஷன் (59), மணீஷ் பாண்டே (26) ரன்களில் ஆட்டமிழந்தனர். தவானுடன் இணைந்து விளையாடிய சூர்ய குமார் யாதவ் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தவான் 86 (95 பந்துகள் 6 பவுண்டரி, 1 சிக்சர்) ரன்களுடன் களத்தில் இருந்தார். இலங்கையின் தனஞ்ஜெயா 2 விக்கெட்டுகளும், லக்ஷன் ஒரு விக்கெட்டும் எடுத்துள்ளனர்.
இந்திய அணி 36.4 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 263 ரன்களை எடுத்தது. இதனால், ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
**-ராஜ்**�,