‘உங்கள் பெருமை எனக்கு வேண்டாம்’: மோடிக்கு பதிலளித்த 8 வயது சிறுமி!

Published On:

| By Balaji

உலகம் முழுவதிலும் மகளிர் தினக் கொண்டாட்டங்களுக்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடந்துவருகிறது. மார்ச் 8-ஆம் தேதியான நாளைய தினத்தில் மகளிரின் பெருமைகளைப் பறைசாற்றவும், அவர்களைக் கொண்டாடவும் பல நாடுகளும் தயாராகி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், **‘மகளிர் தினமான மார்ச் 8-ஆம் தேதியன்று தனது சமூக வலைத்தளக் கணக்குகளைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும், அந்த ஒரு நாள் மட்டும் அவர்கள் அதனை நிர்வகிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும்’** என்றும் அறிவித்திருந்தார்.

அதற்காக #SheInspiresUs என்ற ஹேஷ்டேக்கும் உருவாக்கப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்தி சிறந்த பெண் ஆளுமைகளைக் குறிப்பிட்டு பலரும் ட்வீட் செய்து வருகின்றனர். MyGovIndia என்ற அரசாங்கத்தால் கையாளப்படும் டிவிட்டர் பக்கத்திலும் பலருக்கும் உந்துதலாகத் திகழ்ந்த இந்தியப்பெண்களைக் குறிப்பிட்டு தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில் **லிசிபிரியா கங்குஜம்** என்ற எட்டுவயது சிறுமியின் பெயரைக் குறிப்பிட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த எட்டு வயதே ஆகும் லிசிபிரியா கங்குஜம் இந்தியாவில் மிகச் சிறிய வயது சுற்றுச்சூழல் ஆர்வலர். உலக சிறார் அமைதிப் பரிசு, இந்தியா அமைதிப் பரிசு, அப்துல் கலாம் சிறார் விருது என பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ள அவர், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கத் தொடர்ந்து போராடிவருகிறார்.

தான் இந்த பூமியில் வாழ்ந்த 3040 நாட்களில்(எட்டு வருடம் நான்கு மாதங்கள் ஒரு நாள்) இதுவரை 51,000 மரங்களை இவர் நட்டுள்ளார்.

மேலும் வீட்டில் வளர்க்கத்தக்க சிறிய செடியில் இருந்து பிராணவாயுவை எடுத்துக் கொள்ளும் வகையிலான சுகிஃபு என்ற காற்று சுத்திகரிப்பு கருவியையும் அவர் கண்டறிந்துள்ளார்.

இத்தகைய பெருமைகளைக் கொண்ட சிறுமியைத் தான் #SheInspiresUs என்று கூறிப் பதிவிட்டுள்ளனர். ஆனால் அந்தப் பதிவிற்கு லிசி கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ அன்பான நரேந்திர மோடி ஜி அவர்களே, நீங்கள் என் குரலைக் கேட்கப் போவதில்லை என்றால், தயவுகூர்ந்து என்னைக் கொண்டாடவும் வேண்டியதில்லை. ‘ஷீ இன்ஸ்பையர் அஸ்’ நிகழ்வின் ஒரு பகுதியாக, இந்திய நாட்டின் இன்ஸ்பயரிங் பெண்களில் ஒருவராக என்னையும் தேர்வு செய்ததற்கு நன்றி. ஆனால் பலமுறை சிந்தித்து, உங்கள் பெருமை எனக்குத் தேவையில்லை என முடிவு செய்துள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்தப்பதிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தாலும் கடுமையான விமர்சனங்களும் அவர் மீது வைக்கப்பட்டு வருகிறது.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share