�
இந்திய சினிமாவில் மூத்த நடிகர் அமிதாப்பச்சன். சினிமாவில் நடித்து சம்பாதிப்பதற்கு இணையாக விளம்பரத்திலும் சம்பாதித்து வருகிறார். நகை கடையில் இருந்து நூடுல்ஸ் வரை அவர் நடிக்காத விளம்பரங்களே இல்லை என்கிற அளவிற்கு நடித்திருக்கிறார்.
அவர் நடிக்கும் சில விளம்பரங்கள் அவ்வப்போது சர்ச்சையையும் உருவாக்கும், ஒரு முறை ஒரு கம்பெனியின் நூடுல்ஸ் தடை செய்யப்பட்டது. அந்த நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த அமிதாப் பச்சனுக்கு எதிராக வழக்கே தொடரப்பட்டது. பின்னர் அந்த விளம்பரத்தில் இருந்து விலகினார்.
தற்போது பான்மசாலா விளம்பரம் ஒன்றில் நடித்தார். அரசு அனுமதியுடன்தான் அந்த பான்மசாலா விற்கப்படுகிறது.
சிகரெட், மது விற்பனைக்கு அரசு அனுமதி இருந்தாலும் அதை ஊக்கப்படுத்தும் விளம்பரத்தில் யாரும் நடிப்பதில்லை. மது விளம்பரத்தில் சத்துருக்கன் சின்ஹா மாடலாக இருந்தார். பின்னர் அந்த விளம்பரங்கள் பத்திரிகைகளில் வெளியிடக் கூடாது என்று அரசு அறிவித்ததால் அதுபோன்ற விளம்பரங்களில் பங்கேற்பதை சத்துருக்கன் சின்ஹா தவிர்த்து விட்டார்.
அதேபோலத்தான் பான்மசாலா விளம்பரத்தில் அமிதாப்பச்சன் நடித்திருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
பல சமூக நல அமைப்புகள் குறிப்பாக புகையிலை எதிர்ப்பு இயக்கங்கள் விடுத்த வேண்டுகோளை தொடர்ந்து பான்மசாலா விளம்பரத்தில் இருந்து விலகிக் கொண்டார் அமிதாப் பச்சன். இந்த விளம்பரத்துக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளார். இதற்காக வாங்கிய பெரும் தொகையையும் அமிதாப் பச்சன் திருப்பி கொடுத்து விட்டார்.
**-இராமானுஜம்**
�,