இந்தியா Vs தென்னாப்பிரிக்கா: டி20 தொடா் இன்று ஆரம்பம்!

Published On:

| By admin

இந்திய – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐந்து ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் இன்று (ஜூன் 9) புதுடெல்லியில் தொடங்குகிறது.
கடந்த 2007இல் முதல் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதன்பின் எந்த உலகக் கோப்பையிலும் பட்டம் வெல்லவில்லை. இந்த நிலையில் வரும் அக்டோபா் மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ளது. அதற்கு தயாராகும் வகையில் கடந்த இரண்டு மாதங்களாக ஐபிஎல் தொடா் நடைபெற்றது. அதன் தொடா்ச்சியாக ஐந்து ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் மோதுகின்றன.
ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழி நடத்துவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் காயம் காரணமாக தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து கே.எல்.ராகுல் விலகியுள்ளார்.

அவருக்கு பதில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஹர்த்திக் பாண்டியா துணை கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும் இந்த தொடரில் இருந்து காயம் காரணமாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவும் விலகியுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொந்த மண்ணில் 13 ஆண்டுகள் கழித்து விராட் கோலி, ரோஹித் சா்மா பங்கேற்காத டி20 தொடராக இது அமைகிறது. அதேபோல் மூத்த பௌலா்கள் பும்ரா, ஷமியும் இடம் பெறவில்லை. மணிக்கு 150 கிமீ வேகத்தில் பந்துவீசும் உம்ரான் மாலிக், இடதுகை பௌலா் அா்ஷ்தீப் சிங் இடம் புதுமுகங்களாக இடம்பெற்றுள்ளனா். டெத் ஓவா் ஃபினிஷராக தினேஷ் காா்த்திக்கும் பல ஆண்டுகள் கழித்து டி20 அணியில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இந்தத் தொடரில் இந்திய அணி புதிய உலக சாதனை படைக்க வாய்ப்புள்ளது. இந்திய அணி இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் 12 போட்டிகளில் வென்றுள்ளது. இன்று நடைபெறும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் 13 போட்டிகளில் தொடர் வெற்றி பெற்று உலக சாதனையை இந்தியா படைக்கும்.

இந்த உலக சாதனை குறித்து பேசியுள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், “நாங்கள் உலக சாதனை படைப்பது குறித்து கவனம் செலுத்தவில்லை. என்னைப் பொறுத்தவரை சாதனைகளையும், எண்களையும் பற்றி கவலைப்படுவதில் அர்த்தம் இல்லை. நாங்கள் ஒவ்வொரு போட்டியையும் வெற்றி பெற விரும்புகிறோம். நாங்கள் களம் இறங்குவதற்கு முன் எங்களை தயார் செய்துகொண்டு, பயிற்சி செய்துகொண்டு அவற்றை சரியாக வெளிப்படுத்த முயற்சி செய்கிறோம்.

வலுவான தென்னப்பிரிக்கா அணிக்கு எதிராக களமிறங்கும்போது நம்முடைய பலமும் தெரியவரும். மேலும் இதுவரை வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். நாங்கள் வெற்றி பெறுவது போல விளையாடினால் வெற்றி பெறுவோம், இல்லையென்றாலும் கற்றுக்கொண்டு அடுத்த விளையாட்டை விளையாடுவோம்” என்று ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

**-ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share