தமிழகத்தில் திரைப்படங்களுக்கு வசூலிக்கப்படும் உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரியை 8 சதவீதத்தில் இருந்து 4 சதவீதம் ஆக குறைத்து தமிழ்நாடு அரசு இன்று (மே 30) உத்தரவிட்டுள்ளது. Entertainment Tax reduced as 4% by tn govt
தமிழ் திரையுலகில் ஆண்டுதோறும் பெரிய படங்கள், சின்ன படங்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்கள் திரைக்கு வருகிறது. இந்த படங்களுக்கான டிக்கெட் கட்டணத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரி (Local Body Entertainment Tax) 8 சதவீதம் வரை வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த கேளிக்கை வரி மிகவும் அதிகமாக உள்ளதாகவும், அதனை குறைக்க வேண்டும் என்றும் திரைப்பட துறையினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

குறிப்பாக கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், துணை முதல்வர் உதயநிதியிடம் இதுதொடர்பாக கோரிக்கை வைத்தார்.
அவர், “திரைப்படங்கள் மீதான மாநில கேளிக்கை வரியை நாம் மறுபரிசீலனை செய்து குறைக்க வேண்டும். நீங்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் (திரைப்பட பின்னணி கொண்டவர்) என்பதால் நான் அதைப் பற்றி பெரிதாகப் பேச வேண்டியதில்லை. இந்தக் கோரிக்கை தொழில்துறையிலிருந்து வருகிறது. இந்த இரட்டை வரிவிதிப்பு தொழில்துறையை கவலையடையச் செய்கிறது. இந்தக் கோரிக்கையால் ஏதாவது நடக்கும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட உதயநிதியும், இந்த விஷயம் குறித்து தனது தந்தையும், முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் பேசுவதாகவும், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியைக் குறைப்பது குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என உறுதியளித்தார்.
இந்த நிலையில் தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், திரைப்படங்களுக்கான உள்ளாட்சி அமைப்பு கேளிக்கை வரியை 4 சதவீதமாக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசின் இந்த அறிவிப்பு திரைப்படத் துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.