எண்ணூர் வாயு கசிவு… தொழில்நுட்ப குழு அமைப்பு: மாசு கட்டுப்பாட்டு வாரியம்!

By Minnambalam

|

Published on 27 Dec 2023, 6:44 PM

ennur peoples do not panic

எண்ணூரில் தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயு கசிவை ஆய்வு செய்வதற்காக தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

எண்ணூர், பெரிய குப்பம் பகுதியில் உள்ள கோரமண்டல் உர தொழிற்சாலைக்கு திரவ அமோனியம் எடுத்து செல்லும் குழாயில் நேற்று (டிசம்பர் 26) நள்ளிரவு அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர்.

ADVERTISEMENT

இருப்பினும் சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் கண் எரிச்சல் மற்றும் நெஞ்செரிச்சல் இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் தொழிற்சாலை குழாயில் வாயு கசிவு முற்றிலுமாக நிறுத்தப்பட்டதால் மக்கள் அச்சமடைய வேண்டாம் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை, எண்ணூர் பகுதியில் நேற்று(டிச.26) நள்ளிரவு 11.45 மணியளவில், கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் அம்மோனியா குழாய்களில் ஏற்பட்ட வாயுக் கசிவினால் அருகில் உள்ள பொதுமக்களுக்கு கண் எரிச்சல் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டன.

சென்னை எண்ணூரில் இயங்கி வரும் கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் தொழிற்சாலையில் விவசாயத்திற்குத் தேவையான உரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு அம்மோனியா திரவம் மூலப்பொருளாகத் தொழிற்சாலையின் வளாகத்தில் சேமிப்புத் தொட்டியில் சேகரிக்கப்பட்டு வருகிறது. தேவைப்படும் அம்மோனியா திரவம் அவ்வப்போது வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்பட்டு, எண்ணூரில் அமைந்துள்ள சிறு துறைமுகத்திலிருந்து உரிய குழாய்கள் மூலமாக இந்தத் தொழிற்சாலையில் உள்ள சேமிப்புத் தொட்டியில் சேகரிக்கப்பட்டு உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

ennur peoples do not panic

இந்நிலையில், நேற்று இந்தத் தொழிற்சாலையில் உள்ள குழாய்களில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக் கசிவினால், தொழிற்சாலையின் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசித்துவந்த பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற உபாதைகள் ஏற்பட்டன. வாயுக் கசிவினைக் கண்டறிந்தவுடன் தகுந்த நிபுணர்கள் உடனே வரவழைக்கப்பட்டு, 20 நிமிடங்களில் அந்தத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக் கசிவு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. மேலும் காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் ஒருங்கிணைந்து போதுமான ஆம்புலன்ஸ்களை உடனடியாக ஏற்பாடு செய்து, நிலைமை சரிசெய்யப்பட்டது.

இந்த வாயுக் கசிவினால், பெரியகுப்பம், சின்னக்குப்பம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 60 பேருக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் அதன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது 52 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு மருத்துவ பராமரிப்பு மற்றும் சுகாதார ஆலோசனைகளை வழங்குவதற்காக இரண்டு நுரையீரல் நிபுணர்களைக் கொண்டு 5 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து, அவர்களது உடல் நலன் குறித்து விசாரித்து, உரிய மருத்துவ சிகிச்சைகளை வழங்கிட உத்தரவிட்டார்.

தற்போது குழாயில் அம்மோனியா கசிவு இல்லை என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலாளர், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மண்டல அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI), மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CLRI) மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் அலுவலர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தொழில்நுட்பக் குழு ஒன்று உடனடியாக அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தனது உடனடி மதிப்பீட்டு அறிக்கையை 24 மணி நேரத்திற்குள் அரசுக்கு சமர்ப்பிக்குமாறும், தனது விரிவான அறிக்கையை மூன்று நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், கப்பலில் இருந்து கொண்டு வரப்படும் அம்மோனியாவை வெளியே எடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் குழாய்களை முற்றிலுமாக சரிசெய்து, உரிய பரிசோதனைகள் மேற்கொண்ட பிறகே அம்மோனியம் கப்பலில் இருந்து இறக்கப்பட வேண்டும் என தொழிற்சாலை நிர்வாகத்திற்கு தமிழ்நாடு அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, வாயுக்கசிவு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

தலைவர் 171 படத்தில் நடிக்கிறேனா? சிவகார்த்திகேயன் பதில்!

கூட்டணி : டெல்லி செல்லும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள்!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel