அ. குமரேசன்
லிஃப்ட் கதவு திறந்ததும் பேசிக்கொண்டே வெளியே வந்தவர்கள் சில நொடிகளிலேயே உடன் வந்தவளைக் காணவில்லை என்று கண்டுபிடித்துத் திரும்பிப் பார்த்தார்கள். அவள் லிஃப்ட் கதவோடு போராடிக்கொண்டிருந்தாள். கதவிடுக்கில் அவளுடைய நீண்ட சடை மாட்டிக்கொண்டிருந்தது. enna koondhaluku hairy tale shortflim review
பதறிப்போய் விரைந்து சென்று கதவைத் திறப்பதற்கான விசையைத் தட்டினார்கள். விடுபட்டு வந்தவளிடம், “ஏம்மா சத்தம் கொடுத்திருக்கக்கூடாதா.” என்று கேட்டார்கள் “வெளியே வந்தப்ப எப்படியோ சடை மாட்டிக்கிச்சு. நானே எடுத்திடலாம்னு நினைச்சேன், ஆனா லிஃப்ட் ஸ்விட்ச் கைக்கு எட்டலை. கூப்பிடலாம்னு நினைச்சப்ப நீங்களே பார்த்துட்டு வந்துட்டீங்க,” என்றாள் அவள்.
“நல்ல வேளை உடனே வந்தோம். யாராச்சும் கீழே லிஃப்ட் ஸ்விட்சை அமுக்கியிருந்தாங்கன்னா என்ன ஆகியிருக்கும்,” என்று அவர்களில் ஒருவர் கூற, “ஆமாமா, லிஃப்டில் துப்பட்டா சிக்கினதால., சேலை முந்தானை மாட்டினதால டெத் கூட நடந்திருக்கு,” என்றார் இன்னொருவர்.
நிஜமும்… இதிகாசமும்
அவர்களைச் சேர்ந்தவர்கள் அல்லாத, லிஃப்ட்டில் வந்த மற்றவர்களும் நிம்மதிப் பெருமூச்சோடு அந்த இடத்திலிருந்து நகர்ந்தோம். அந்தக் குடும்பத்தில் ஒரு பெண் குரல், “ஏன் இவ்வளவு நீளமா முடியை வளர்த்து வச்சிருக்க, இந்தக் காலத்துக்கு ஏத்த மாதிரி டிரிம் பண்ணிக்கிட வேண்டியதுதானே,” என்று கேட்டது காதில் ஒலித்தது. இது நடந்து நான்கைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. குறும்படத்தைப் பார்த்தபோது அந்தக் கேள்வி மறுபடியும் மனதில் ஒலிக்கிறது.

நீண்ட கூந்தலே தனித்ததோர் அழகாகக் கருதும்படி கற்பிக்கப்பட்ட பெண்கள், கூந்தலை விரித்துப் போட்டு யாரையோ திட்டித் தீர்க்கும் பெண்கள், பழி வாங்கும் வரையில் கூந்தலை முடிய மாட்டேன் என்று சபதம் செய்யும் பெண்கள்… வரலாற்றுப் பதிவுகளிலும் இதிகாச இலக்கியங்களிலும் இப்படி நிறையப் பேரைப் பார்த்து வந்திருக்கிறோம். வாழ்க்கையிலோ குடிகாரக் கணவனின் கையில் சிக்கிய கூந்தலால் தலையெல்லாம் வலியோடு எழும் அலறல்களைக் கேட்டு வருகிறோம். அப்படியெல்லாம் அலறவும் சுதந்திரமற்றவர்களாகக் கூந்தல் சுமையைச் சுமந்துகொண்டிருக்கும் பெண்களில் ஒருத்தியின் கதைதான் “என்ன கூந்தலுக்கு”.
அடிக்கடி அலுவலகத்திற்குத் தாமதமாக வந்து அதிகாரியிடம் “பாட்டு” வாங்கிவிட்டு இருக்கைக்கு வருகிறாள் கர்ப்பிணியான தமிழ்ச்செல்வி. பரிவுடன் காரணத்தைக் கேட்கும் தோழியிடம், வீட்டுக் கெடுபிடியால் தலைக்குக் குளித்துவிட்டு, முடி உலர்கிற வரையில் காத்திருந்து கிளம்ப நேரிடுவதைக் கூறுகிறாள். அடர்ந்த நீண்ட கூந்தலால், ஈரம் உலராத நிலையில் தலைவலி ஏற்படுவதையும் தெரிவிக்கிறாள். முடியை வெட்டிக்கொள்ள வேண்டியதுதானே என்று, ஏற்கெனவே அப்படி சீர்ப்படுத்திக்கொண்டவளான தோழி கேட்க, அந்த முயற்சிகள் தோல்வியடைந்ததை விளக்குகிறாள் (“அதெல்லாம் வேண்டாம், குடும்பப் பொண்ணா லட்சணமா இரு“ …. “நீள முடிதாண்டி உனக்கு அழகு… உன்னைப் பெண் பார்க்க வந்தப்பவே உன் கூந்தலைப் பார்த்து மயங்கினவன் நான்” ….)

பிறகு பிரச்சினையை அவள் எப்படித்தான் சமாளிக்கிறாள் என்று “ஜாலியாக” சொல்கிறது படம். போதனைப் பாதைக்குச் செல்லாமல் கதை வடிவில் காட்சிப்படுத்தியிருப்பதும், அந்தக் கலகலப்பும் நல்லதொரு கலையின்பத்தை வழங்க, மனமகிழ்வுத் தரத்தோடு அமைந்திருக்கிறது படம்.
கூந்தல் கட்டுப்பாடுகள் தாய் வழியிலேயே வருவதும் சில நொடித்துளிகளில் காட்டப்படுகிறது. பழமையில் ஊறிய கெடுபிடிக்கார மாமியாரை மட்டும் முன்னிறுத்தாமல், பிரசவத்துக்குப் பின் மருத்துவனையில் படுத்திருக்கும் மருமகளிடம் பரிவோடு பேசுகிற பெண்ணாகவும் சித்தரித்திருக்கும் எதார்த்தத்தில் நிறைவிருக்கிறது. அவருடைய நம்பிக்கைகளே தமிழ்ச்செல்வியின் கூந்தல் சிக்கலுக்கு ஒரு தீர்வாகவும் மாறுவது சிறப்பான திருப்பம்.
குறும்படத்தின் கதை enna koondhaluku hairy tale shortflim review
நடைமுறைக்கு ஏற்ற, வாழ்வதற்குத் தோதான, உறவுக்கு இணக்கமான முடிவுகளை எடுப்பதற்கு உதவுவார்கள் என்றால் குடும்பங்களின் குலதெய்வங்களைப் பொங்கல் வைத்துக் கொண்டாட முற்போக்காளர்களும் ஆதரவளிப்பார்கள்! செல்வியின் முடிச் சிக்கல் தீர்ந்ததற்கும் குலதெய்வத்திற்கும் என்ன தொடர்பு? பத்தே நிமிடம்தான் – குறும்படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

கைகளின் செயல்பாட்டிற்கும் மூளையின் இயக்கத்திற்கும் தொடர்பிருக்கிறது என்பது அறிவியல். நம் பெண்களின் கைகள் முகத்தில் விழும் கூந்தல் முடிகளைத் தள்ளி விடுவதிலும், விலகும் முந்தானையை இழுத்துவிட்டுக் கொள்வதிலுமே பாதி நேரம் போய் விடுகிறது. அவர்களைச் சிந்திக்க விடாமல் முடக்குகின்ற ஏற்பாடுகளில் ஒன்றாகவே கூந்தல் வளர்ச்சியும் பராமரிப்பும் இருக்கின்றன.
ஒரு பொருளை அல்லது நிகழ்வை அற்பமானதாகச் சொல்வதற்கு “மயிரே போச்சு” என்று தள்ளுபடி செய்வதும், தேவையின்றி ஒரு செயலில் ஈடுபட்டவரைப் பார்த்து, “என்ன மசுத்துக்கு இப்படிச் செய்தாய்,” என்று கேட்பதும் ஊர்ப் பழக்கம். பின்னாளில், “என்ன கூந்தலுக்கு” என்று கேட்கிற பழக்கமும் சேர்ந்தது. இது வெறும் மயிர் அல்லது கூந்தல் பிரச்சினை அல்ல என்று அவரவர் வீட்டு நிலவரங்களோடு இணைத்து யோசிக்க வைக்கிறார்கள் ‘சினிவெர்ஸ்’ படக்குழுவினர்.
முடிவெடுக்கும் அதிகாரம் enna koondhaluku hairy tale shortflim review

அலுவலக இருக்கையில் அமர்கிறவள் கைப்பையிலிருந்து தைலத்தை எடுத்து நெற்றியில் தடவிக்கொள்வதிலேயே அவளுடைய தலைவலி உணர்த்தப்படுகிறது. இத்தகைய நுட்பமான தூவல்கள் படத்தை நயமாக்கியுள்ளன. “பிரம்மாண்ட” தயாரிப்புகளை விட கருத்தின் ஆழமும் கலையின் எழிலுமாக அமையும் சிறிய படைப்புகள், இதில் நாமும் படப்பிடிப்புத் தளத்தில் எல்லோருக்கும் தேநீர் வழங்குகிறவராகவாவது பங்கேற்றிருக்கலாமே என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். காட்சிகளில் அடுத்தடுத்து காஃபி நீட்டப்படுகிற இந்தப் படமும் அந்த எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
சமூக அக்கறை சார்ந்த இலக்கியக் கலந்துரையாடல்களில் அறிமுகமானவர்களான ஜே. தீபலட்சுமி, எம். ரீனா ஷாலினி நடிப்பும் பேச்சும் நம்மோடு உரையாடுவதாகவே இருக்கின்றன. எம்.கே. ஜான்சிராணி, விஜய் ராம், கமலி பன்னீர்செல்வம், ஜே. ராகுல், அனந்த கீதன், சங்கீதா ஆகியோரும் நடிப்புப் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். ஹேமந்த் குமார் பாண்டியராஜனின் ஒளிப்பதிவு கண்களுக்கும், ஹாரிஷ் இசையமைப்பு செவிகளுக்கும் விருந்தளிக்க, நேர்த்தியாகத் தொகுத்திருக்கிறார் கவி இனியன்.

தலைமுடி அடர்த்தியைக் கடந்து தலைக்குள் நுழையும் ஆக்கத்தை இளங்கோவன் கீதா தயாரிப்பில், கமலியோடு இணைந்து கதையை எழுதியுள்ள கீதா இளங்கோவன், படைப்பாக்கத்துடன் ஒருங்கிணைத்து இயக்கி வழங்கியிருக்கிறார். இவரது ஆவணப்படமான ‘மாதவிடாய்’ போலவே கதைப்படமாக வந்துள்ள இதுவும் பரிசுகள் பெறும், பரவலாகச் சென்றடையும் என எதிர்பார்க்கலாம்.
கூந்தலை நீளமாக வளர்த்துக்கொள்வதா, அளவோடு நறுக்கிக்கொள்வதா? இதை முடிவு செய்ய வேண்டியவள் பெண். புதிய வாழ்க்கை முறைகளைச் சந்திக்கும் பெண் என்ன முடிவு செய்வாள் என்பது ஊகிக்கத்தக்கதே. அந்த முடிவுக்கு ஆதரவாக இருக்க முடிவெடுக்கப் படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரையும் தமிழ்ச்செல்வி தூண்டுவாள். முடி விசயத்தோடு மட்டும் அது முடிந்துவிடாது.