கோடைக்கேற்ற வெள்ளரி வகையைச் சேர்ந்த தர்பூசணியில் கொழுப்பு துளியும் இல்லை என்பதுடன் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் இதில் நிறைவாக உள்ளதால் அனைவருக்கும் ஏற்றது. enjoy this summer with watermelon
கொழுப்பைக் கரைக்கும் ஆற்றலும் தர்பூசணிக்கு உண்டு. இதில் உள்ள ‘சிட்ருலின்’ உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு செல்களை வெளியேற்றுகிறது. மேலும் அதிகப்படியான கொழுப்பு உடலில் சேருவதையும் இது தடுக்கிறது. ஃபிளவனாய்ட், கரோட்டினாய்ட் போன்ற ஊட்டச்சத்துகள் இதில் நிறைவாக உள்ளன. செல்களின் வீக்கங்களைக் கட்டுப்படுத்தி, ஆக்சிஜன் பயன்பாட்டால் ஏற்படக்கூடிய எதிர்வினைகளைக் கட்டுப்படுத்துகிறது. உடலில் உள்ள செல்களுக்கு ஆற்றலைத் தருகிறது. பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. செல்களின் வளர்ச்சியைத் தூண்டுவதால், சரும நோய்கள் வராமல் காக்கிறது.
தர்பூசணி உள்ள வைட்டமின் சி, உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அளித்து, உடல் வெப்பத்தைத் தணித்து, குளிர்ச்சியைத் தருகிறது. பொட்டாசியம் இதில் அதிகம் இருப்பதால், ரத்த அழுத்த நோய் கட்டுப்படும். மேலும், நரம்பு செல்கள் மற்றும் தசைகளின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தும்
கோடையில் ஏற்படு சிறுநீர் எரிச்சலுக்கு அருமருந்தாகவும் இருக்கிறது தர்பூசணி. ஆல்கஹால், காபி போல, சிறுநீரகத்துக்கு அதிகப்படியான வேலை கொடுக்காமலேயே சிறுநீரைப் பெருக்கி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இருமல், சளி உள்ளவர்கள், தர்பூசணிப் பழச்சாற்றில் சீரகப் பொடி சேர்த்துக் குடித்தால், சளிப் பிரச்னை இருக்காது. நாள் ஒன்றுக்குத் தேவையான கார்போஹைட்ரேட்டில் ஏழு சதவிகிதம் இதில் இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் மற்றும் சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் அளவோடு எடுத்துக் கொள்ளலாம்.
மூளையில் மகிழ்ச்சியை தரும் டோபோமைன் என்ற ரசாயனம் சுரக்க தர்பூசணி உதவுகிறது. அப்புறம் என்ன, தர்பூசணியை ருசிப்போம்… கோடையைக் கொண்டாடுவோம்!