இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று (ஜூலை 10) இரவு நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (ஜூலை 9) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நேற்று (ஜூலை 10) இரவு நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் 18 ரன்களிலும், ஜேசன் ராய் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த டேவிட் மலான் – லியாம் லிவிங்ஸ்டன் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்ட மலான் அரை சதம் அடித்தார். அதன்பிறகு இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டனர். சிறப்பாக விளையாடிய மலான் 39 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து லிவிங்ஸ்டன் அதிரடி காட்ட இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது.
ரிஷப் பண்ட் ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். விராட் கோலி, ரோஹித் சர்மா தலா 11 ரன்களில் அவுட்டாகினர். 31 ரன்களுக்குள் இந்தியா மூன்று விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அடுத்து களமிறங்கிய ஷ்ரேயஸ் அய்யர், சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்தார். ஷ்ரேயஸ் அய்யர் நிதானமாக ஆட சூர்யகுமார் அதிரடியில் இறங்கினார். மைதானம் முழுவதும் பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.
டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் 48 பந்துகளில் முதல் சதத்தைப் பதிவு செய்தார். அவர் 55 பந்துகளில் 117 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இங்கிலாந்து 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றது.
-ராஜ்