இன்ஜினீயரிங் மாணவர்களுக்கு பிப்ரவரி 18 வகுப்புகள் தொடக்கம்!

Published On:

| By Balaji

10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கடந்த 19ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது மற்றும் இறுதி ஆண்டு செமஸ்டர் தவிர்த்து மற்ற இன்ஜினீயரிங் மாணவர்களுக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 18ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தன்னாட்சி அதிகாரம் இல்லாத இணைப்பு இன்ஜினீயரிங் கல்லூரிகளில் பிப்ரவரி – ஜூன் மாதத்துக்கான செமஸ்டர் வகுப்புகள் தொடர்பான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இரண்டாவது மற்றும் இறுதி ஆண்டு செமஸ்டர் மாணவர்களை தவிர பிற செமஸ்டர் மாணவர்களுக்கான வகுப்புகள் அடுத்த மாதம் (பிப்ரவரி) 18ஆம் தேதி முதல் தொடங்கும்.

இந்த மாணவர்களுக்கான இறுதி வேலை நாள் மே 21ஆம் தேதி ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. வாரத்துக்கு ஆறு நாட்கள் வேலை நாளாக கருத்தில்கொண்டு, மே 21ஆம் தேதி வரையிலான நாட்களுக்கு இடைப்பட்ட சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தலாம். வகுப்புகள் அரசின் உத்தரவின்படி ஆன்லைன் மூலம் நடத்தப்பட வேண்டும்.

ADVERTISEMENT

இவர்களுக்கான செய்முறைத் தேர்வு மே 24ஆம் தேதியும், எழுத்துத் தேர்வு ஜூன் 2ஆம் தேதியும் தொடங்கி நடைபெறும். இந்தத் தேர்வுகள் அனைத்தும் முடிந்து அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் ஜூலை 1ஆம் தேதி தொடங்கும்.

இதேபோல், டிசம்பர் – மே மாதத்துக்கான இறுதி செமஸ்டர் வகுப்புகள் கடந்த ஆண்டு (2020) டிசம்பர் மாதம் 14ஆம் தேதி தொடங்கி நடந்து வருகின்றன. இவர்களுக்கான கடைசி வேலை நாள் ஏப்ரல் 12ஆம் தேதி ஆகும். இந்த மாணவர்களுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெறும். எழுத்துத் தேர்வு ஏப்ரல் 26ஆம் தேதி முதல் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

**-ராஜ்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share