சென்னையில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீடு உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

Published On:

| By Minnambalam Desk

சென்னையில் டாஸ்மாக் (TASMAC) மேலாண் இயக்குநர் விசாகன் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபான கொள்முதல், விற்பனையில் முறைகேடுகள் நடந்ததாக கூறி வழக்குப் பதிவு செய்த அமலாக்கத்துறை கடந்த மார்ச் மாதம் 3 நாட்கள் தொடர்ச்சியாக சோதனைகள் நடத்தியது. சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் உட்பட 7 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டி இருந்தது. இதற்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மறுப்பும் தெரிவித்திருந்தார்.

இந்த பரபரப்பைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதமும் சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதனைத் தொடர்ந்து இன்றும் சென்னையில் பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். Enforcement Directorate Raids

சென்னை மணப்பாக்கத்தில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீடு, திருவல்லிக்கேணி, தேனாம்பேட்டை, சூளைமேடு உள்ளிட்ட இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share