வேலூர் CMC மருத்துவமனை மருத்துவர்கள் விடுதியில் அமலாக்கத்துறை திடீர் சோதனை!

Published On:

| By Mathi

Vellore CMC Hospital

வேலூரில் புகழ்பெற்ற சி.எம்.சி. (Christian Medical College Vellore) மருத்துவமனையில் மருத்துவர்கள் தங்கும் விடுதியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூரில் சி.எம்.சி. மருத்துவமனை மருத்துவர்களுக்காக தோட்டப்பாளையம் பகுதியில் தனி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் கேரளாவை சேர்ந்த டாக்டர் பீஜியன் என்பவர் தங்கி இருந்த வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினருடன் திடீரென இன்று காலை முதல் இந்த சோதனை நடைபெறுகிறது.

ADVERTISEMENT

டாக்டர் பீஜியனுக்கு சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறபடுவதால் அவர் தங்கியிருந்த வீடு முழுவதும் பல மணிநேரமாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

வேலூர் சிஎம்சி மருத்துவமனைபின்னணி

ADVERTISEMENT

19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தனது பெற்றோருடன் தென்னிந்தியாவில் வாழ்ந்த அமெரிக்காவை சேர்ந்த ஐடா ஸ்கடர், பிரசவத்தின்போது பெண்கள் அனுபவித்த சொல்ல முடியாத துன்பங்களைக் கண்டு மனம் உருகினார். அன்றைய காலகட்டத்தில், பரவலாக இருந்த தொற்றுநோய்கள், மூடநம்பிக்கைகள் மற்றும் ஆண் மருத்துவர்களை பிரசவத்திற்கு அனுமதிக்காத சமூக மரபுகள் காரணமாக தாய்மார்கள் உயிரிழப்பது சகஜமாக இருந்தது. சராசரி ஆயுட்காலம் 24 வயதாக இருந்த அக்காலத்தில், இந்தியப் பெண்களுக்கு மருத்துவ உதவி வழங்க வேண்டும் என்ற உத்வேகம் அவரை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றது. அங்கே மருத்துவம் பயின்ற ஐடா, 1899 இல் பட்டம் பெற்று, தனது சேவைக்கனவை நனவாக்க வேலூருக்குத் திரும்பினார்.

1900 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், வேலூரில் ஒரு சிறிய ஒரு அறை கிளினிக்காக சி.எம்.சி தனது பயணத்தைத் தொடங்கியது. டாக்டர் ஐடா ஸ்கடரின் அயராத உழைப்பின் விளைவாக, 1902 ஆம் ஆண்டில், மேரி டேபர் ஷெல் என்பவரின் நினைவாக ஒரு அமெரிக்க செல்வந்தரால் நிதியளிக்கப்பட்ட 40 படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனையாக விரிவடைந்தது.

ADVERTISEMENT

மருத்துவ சேவைக்கு அப்பால், எதிர்காலத் தலைமுறையினரை உருவாக்குவதிலும் ஐடா ஸ்கடர் கவனம் செலுத்தினார். 1909 இல் ஒரு செவிலியர் பள்ளியையும், தொடர்ந்து 1918 இல் ஒரு மருத்துவப் பள்ளியையும் நிறுவினார். தாய்மார்களின் இறப்பைக் கண்டு மனம் நொந்த அவர், ஆரம்ப காலகட்டத்தில் மருத்துவக் கல்விக்கான 100% இடங்களை பெண்களுக்கே ஒதுக்கினார். இது அக்கால சமூகத்தில் ஒரு புரட்சிகரமான முடிவாகப் பார்க்கப்பட்டது. பெண் மருத்துவர்களை உருவாக்குவதன் மூலம், சமூகத் தடைகளை உடைத்து, பெண்களுக்கான சுகாதாரச் சேவையை அணுகக்கூடியதாக மாற்றினார்.

1942 இல், சி.எம்.சி மெட்ராஸ் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு ஒரு முழுமையான மருத்துவக் கல்லூரியாக மேம்படுத்தப்பட்டது. பின்னர் 1947 இல், ஆண்களுக்கும் மருத்துவப் படிப்பிற்கான கதவுகளைத் திறந்து, மேலும் பல இளைஞர்களுக்கு மருத்துவ சேவைக்கான வாய்ப்பை வழங்கியது. கிராமப்புற மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற டாக்டர் ஐடா ஸ்கடரின் தொலைநோக்கு, சி.எம்.சி யின் வளர்ச்சிப் பாதையில் ஒரு முக்கிய அம்சமாக இருந்தது.

டாக்டர் ஐடா ஸ்கடர் 1960 இல் காலமான பிறகு, இந்த நிறுவனத்தின் நிர்வாகம் இந்திய புராட்டஸ்டன்ட் தேவாலயங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அடுத்த தசாப்தங்களில், சி.எம்.சி மேம்பட்ட மூன்றாம் நிலை சிகிச்சையில் பெரும் முன்னேற்றங்களை அடைந்தது. இந்தியாவில் இருதய அறுவை சிகிச்சை, நரம்பியல் அறுவை சிகிச்சை, குழந்தை அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை போன்ற பல துறைகளில் முன்னோடியாகத் திகழ்கிறது. பல சிக்கலான மருத்துவச் சிகிச்சைகளை முதன்முதலில் அறிமுகப்படுத்திய பெருமையும் சி.எம்.சிக்கு உண்டு.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share