வலதுசாரிகள் நெருக்கடி… ‘எம்புரான்’ படத்தில் இத்தனை நிமிட காட்சிகள் நீக்கமா?

Published On:

| By Selvam

மோகன்லால் நடித்துள்ள ‘எம்புரான்’ படத்தில் மூன்று நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. Empuraan movie cut three

பிருத்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடித்த ‘எம்புரான்’ திரைப்படம் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரம், பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை, பிஎம்எல்ஏ சட்டத்தை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக காட்சிகள் இடம்பெற்றிருந்தது.

இதற்கு பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர். இதனை தொடர்ந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றதாக கூறப்படும் 17 இடங்களில் கட் செய்ய தயாரிப்பு நிர்வாகம் முடிவு செய்திருந்தது.

இதனையடுத்து படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக கேரள முதல்வர் பினராயி விஜயன், தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்தார். மேலும், “பிரிவினைவாதத்திற்கு எதிராக பேசிய ஒரே காரணத்தால் ஒரு கலை படைப்பு அழிக்கப்படுவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. இந்த நிலம் எப்போதும் ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளை நிலைநிறுத்தியுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

படம் தொடர்பான சர்ச்சை எழுந்ததும் மோகன்லால் தனது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். இதுதொடர்பாக மோகன்லால், “ஒரு கலைஞனாக, என்னுடைய எந்தப் படமும் எந்த ஒரு அரசியல் இயக்கம், சித்தாந்தம் அல்லது மற்ற பிரிவினர் மீது வெறுப்புணர்வைக் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவது எனது கடமை. படத்திலிருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை காட்சிகள், வில்லன் கதாபாத்திர பெயரை பஜ்ரங்கிக்கு பதிலாக பால்ராஜ் என மாற்றம் உள்ளிட்ட மூன்று நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. மத்திய தணிக்கை கட்டுப்பாட்டு வாரியம் இதற்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் இன்று முதல் எம்புரான் திரைப்படத்தில் மூன்று நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு படம் திரையரங்குகளில் ஒளிபரப்பு செய்யப்படும். Empuraan movie cut three

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share