வாக்கு எண்ணும் மையத்தின் கட்டுப்பாட்டு அறையில் சட்டவிரோதமாக ‘ஜனநாயகன்’ படம் பார்த்த சிசிடிவி மெயின்டனன்ஸ் ஊழியர் யுவராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. வரலாறு காணாத வகையில் 85.10 சதவீதம் பேர் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.ஓட்டுகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் விவிபாட் (VVPAT) ஆகியவை பலத்த பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு ‘ஸ்ட்ராங் ரூம்’ எனப்படும் பாதுகாப்பு அறையில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
தொடர்ச்சியாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் அதிகாரிகள் அறைகளைப் பூட்டி சீல் வைத்தனர். வாக்கு எண்ணும் மையங்களில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவல்துறையினரும், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படை வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் பாதுகாப்புப் பணிக்காக சுமார் 18,000 போலீசார் பாதுகாப்புப் படையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக தமிழகம் முழுவதும் 62 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் நவீன பாதுகாப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தின் சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் டெக்னிக்கல் ஹெட் ஆக பணியமர்த்தப்பட்ட யுவராஜ் என்பவர், கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்தபடி நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாகப் பார்த்துள்ளார். இதை அவரே தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து, ஒப்பந்த ஊழியரான யுவராஜை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.









