16-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் 8-வது கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று (பிப்.20) முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் உணர்வுப்பூர்வமாக உரையாற்றினர்.
சட்டப்பேரவையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:
நான் ஒரு நெகிழ்வுத் தன்மையோடு இந்த அவையில் தற்போது நின்றுகொண்டிருக்கிறேன். நான் 40 ஆண்டுகளுக்கு முன்பாக என் உறவுகளோடு தேனாம்பேட்டையில் இருக்கிற அன்பகத்திற்கு வருகை தந்து, தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களையும், பேராசிரியர் பெருந்தகையையும், நாஞ்சிலார் அவர்களையும், இன்னும் மூத்த தலைவர்களையும் என் உறவுகள் எனக்கு அறிமுகம் செய்கின்ற அந்த குழந்தை பருவத்தில்… அன்றைக்கு இதே உடல் தோற்றத்துடன், தலையின் முடி மட்டும் சுருளாக இருந்து பார்த்த அந்த உருவம், இன்றைக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்லாமல், ஒரு அரசியல் பேரியக்கத்தை – திராவிட முன்னேற்றக் கழகம் இந்தியாவிற்கு வழிகாட்டியாக எப்படி நடத்துகிறது, நடத்தி வருகிறது என்பதையெல்லாம் நானும் எனது குடும்பமும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோன்றல்கள் என்கிற அடிப்படையில் நான் பூரித்துப் பார்த்து மகிழ்ச்சியடைகிறேன்.
திமுக கட்டமைப்பு
காரணம், இந்தியாவில் ஒரு அரசியல் பேரியக்கம் தமிழ்நாட்டில் இருக்கிற 12,000-த்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் இருக்கின்ற லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமப்புறங்களில் அமைப்பை நிறுவி, அமைப்பை உருவாக்கி, அந்த அமைப்பு எப்படி நடைபெற வேண்டும் என்பதற்கு எனக்குத் தெரிந்து உலகத்திலேயே ஒரு முன்னுதாரணமான ஒரு அரசியல் பேரியக்கம் இந்தியாவில் இருக்கிறது என்று சொன்னால் அது திராவிட முன்னேற்றக் கழகம்.

நான் ஏன் இதை நினைவு கூறுகிறேன் என்று சொன்னால், நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் குடும்பத்திலிருந்து நான் தலைவர் அவர்களைப் பார்ப்பதற்கு கோபாலபுரம் வீட்டிற்கு வந்தேன். தலைவர் அவர்களைப் பார்க்க முடியவில்லை. தளபதி அவர்கள் வீட்டில் இருக்கிறார் அவரைப் பார்க்க வேண்டும் என்று ஒரு மாணவனாக வருகை தந்து பார்ப்பதற்கு முயற்சி செய்தேன்.
உடனடியாக செய்தி தளபதி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு வெளியில் வந்தார். அன்றைக்கு ஆர்வ மிகுதியின் காரணமாக – எப்போதும் என்னை தளபதி அவர்கள் ‘கொஞ்சம் ஆர்வம் உள்ளவர்’ என்று சொல்வார் – ஆர்வ மிகுதியின் காரணமாக நான் ‘தங்கள் பெயரிலே ஒரு நற்பணி மன்றம் அமைக்க வேண்டும்’ என்று ஒரு நற்பணி மன்றத்தை அமைத்து ஒரு மினிட் நோட்டை (Minute Note) கொண்டு வந்து கையெழுத்து வாங்க வந்தேன்.
மறுக்காமல் கையெழுத்துப் போட்டுவிட்டுச் சொன்னார், ‘நீ இனிமேல் என்னைப் பார்க்க நேரடியாக வரக்கூடாது. குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தினுடைய கழக ஒன்றிய செயலாளர் கணேசமூர்த்தி இருக்கிறார், மாவட்டத்தினுடைய அமைப்பாளர் தயாளுமூர்த்தி இருக்கிறார், அவரைச் சென்று பார்த்துவிட்டு அதற்குப் பிறகு இங்க வரணும்’ என்று அறிவுறுத்தினார்.
நான் எதற்காக இதைச் சொல்கிறேன் என்று சொன்னால், மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களே… நீங்களும் தலைவர் கலைஞர் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும் இந்த திராவிட இயக்கத்தை இன்று வரை கட்டிக்காத்து வருகிறீர்களே… ஒரு அரசியல் இயக்கம் எப்படி நடைபெற வேண்டும்? எனக்குத் தெரிந்து இந்தியாவில் இருக்கிற அரசியல் கட்சியில ஒவ்வொரு நகராட்சிக்கும் மினிட் நோட், ஒவ்வொரு பேரூராட்சிக்கும் மினிட் நோட், ஒவ்வொரு ஊராட்சிக்கும் மினிட் நோட், ஒரு ஒன்றியத்திற்கும் மினிட் நோட், ஒரு மாவட்ட கழகத்திற்கும் அலுவலகம் கொண்டு ஒரு சிஸ்டமேட்டிக்கா (Systematic), இப்படி எப்படி ஒரு அரசு உங்க தலைமையில் இயங்குதோ, ஒரு இயக்கம் எப்படி மாநாடு நடத்தணும், எப்படி கருத்தரங்கம் நடத்தணும், எப்படி கூட்டம் நடத்தணும், எப்படி ஒரு அரசியல் இயக்கம் தமிழ்நாட்டில் நடைபோட வேண்டும் என்பதற்காக இன்றைக்கு ஒரு கட்டமைக்கப்பட்ட, ஒழுங்கு செய்யப்பட்ட, நேர்த்தியான ஒரு இயக்கத்தை கட்டி அமைத்த வரலாற்றுப் பெருமை கொண்ட இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்
எத்தனையோ தலைவர்கள் வந்திருந்தாலும், உங்களுக்குக் கிடைத்த தளபதிகள்… இன்னைக்கு அமைச்சராக இருக்கிறவங்க, கடைக்கோடி எங்கள் அண்ணன் கணேசன் முதல் அக்கா கயல்விழி வரைக்கும் பார்க்கிறேன். இந்த திராவிட இயக்கத்தினுடைய வழித்தோன்றல், அந்த வார்த்தெடுப்பு… இந்த முதல் முறை அமைச்சராக இருந்தாலுங்கூட, இந்த திராவிட இயக்கத்திற்கு உரிய அந்தப் பாணியில பதில் சொல்றது… எங்கும் பிசிறில்லை, எங்கும் தட்டுத் தடுமாற்றங்கள் இல்லை. இந்தத் தயாரிப்பு இருக்குல்ல, இது இந்தியாவுல வேற எந்தக் கட்சியிலும் இருக்காது.
ஒழுக்கமும் கட்டுப்பாடும்
நான் சென்னைக்கு வந்த பிறகு இங்கே நம்முடைய சைதை கிட்டு போன்றவர்கள், பலராமன் போன்றவர்கள், சுந்தரம் அமைச்சர் போன்றவர்கள், மதுராந்தகத்தார் போன்றவர்கள்… இப்படி சென்னையிலே இருந்த காரணத்தினால் சிறிது காலம் அண்ணா அறிவாலயத்தில் இருந்துகொண்டு பார்த்தேன். அன்றைக்கு எப்படிப் பார்த்தேனோ அதே ஒழுங்கு, அதே கட்டுப்பாடு, அதே சிஸ்டம். அதனால்தான் இன்னைக்கு திமுக என்கிற கட்சியை எவனாலும் அசைத்துப் பார்க்க முடியவில்லை.”
எதிர்ப்புகளைத் தாண்டிய வளர்ச்சி
எத்தனையோ பேர் வர்றாங்க… வீழ்த்தணும், அது பண்ணணும், இது பண்ணணும், ஒழிக்கணும், அழிக்கணும் அப்படின்னு. அப்படிச் சொன்னவங்க எல்லாம் இந்த நாட்டிலே இன்றைக்கு இருக்கிற இடந்தெரியாமல் சென்றுகொண்டிருக்கிறார்கள். உங்களுடைய உழைப்பு, உங்களுடைய அர்ப்பணிப்பு, அது அரவணைப்பு… அந்த நேரத்துக்குக் கொஞ்சம் கோபமாகக் கடிந்து கொண்டாலும்… நானே அதற்கு உதாரணம்.
முதலமைச்சரின் பண்பு
நீங்க உங்களுடைய சின்னத்துல என்ன நிக்க வச்சு, நான் ஒரு எம்.எல்.ஏ-வா அங்க உட்கார்ந்திருக்கிறேன். ஆனா ஐந்தாண்டு காலம் என் மனசாட்சிக்குத் தெரியும், நான் மிகப்பெரிய அளவில் புகழுரையை இந்த அமைச்சர் பெருமக்களை உரைக்கவில்லை, இந்த அரசைப் பாராட்டவில்லை. எதிரணியில் ஒரு சட்டமன்ற உறுப்பினராக எப்படிச் செயல்படுவனோ அப்படித்தான் செயல்பட்டிருக்கிறேன்.
ஆனா எந்த இடத்திலயும் பேரவைத் தலைவர் அறையில் சந்திக்கின்ற போதோ, தங்களைத் தனிப்பட்ட முறையில் சந்திக்கின்ற போதோ, வாகனத்திற்கு வந்து நான் உங்களை வழியனுப்புகின்ற போதோ… எந்த இடத்திலும் ஒரு சிறு கடுகளவும் முகத்தைக் காட்டாமல், தாயுள்ளத்தோடு என்னைச் சிரித்து, கைப்பிடித்து மகிழ்ந்து… அரசு விழாக்களிலேயோ நீங்க கூப்பிடுற நிகழ்ச்சிகளிலேயோ முதல் ஆளா தலைவரை வரவேற்கிற இடத்துல நான்தான் இருப்பேன். வந்தவுடனே என் கையைக் கொடுத்து ‘நல்லா இருக்கீங்களா’ – இந்தச் சிரித்த முகம். ஆனா முதல் நாள் சட்டமன்றத்துல கடுமையா பேசியிருப்பேன். ஆக, இந்த உள்ளம்தான் இன்றைக்கு உங்களை உச்சத்தில் உட்கார வைத்திருக்கிறது.
வரலாற்றுச் சாதனைகள்
எதிரிகள் கூட உங்களைப் பாராட்டுகிற இடத்திற்கு நீங்கள் வளர்ந்திருக்கிறீர்கள். நீங்க எம்.எல்.ஏ-வா இருக்கும்போது உங்களோடு எதிர்க்கட்சி வரிசையில் எம்.எல்.ஏ-வா இருந்தேன். நீங்கள் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது நான் உங்களோடு பணியாற்றினேன். நீங்கள் துணை முதலமைச்சராக இருந்தபோதும் உங்களோடு பணியாற்றினேன். இந்த நாட்டுடைய, தமிழ்நாட்டினுடைய உச்சபட்ச அதிகாரம் படைத்த முதலமைச்சராக நீங்கள் இருக்கின்ற போதும் அந்த வாய்ப்பை எனக்கு வழங்கி உங்களோடு பணியாற்ற வாய்ப்புத் தந்திருக்கிறீர்கள்.
தலைவர் கலைஞரை விடவும், தாங்கள் தலைமையேற்றுத் தமிழ்நாட்டின் தேர்தலைச் சந்தித்ததில் தோல்வியே எதிர்கொள்ளாத தலைவராக நீங்கள் வளர்ந்திருக்கிறீர்கள்.
துணை முதலமைச்சர் மற்றும் எதிர்காலம்
ஆறாவது முறை இந்த நாட்டுக்கு முதலமைச்சராக திராவிட முன்னேற்றக் கழகம் அமைந்திருக்கிறது. ஏழாவது முறையும்… திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ச்சியாக இரண்டாவது முறை தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் உங்கள் தலைமையில் ஏறியது, அமர்ந்தது என்கிற வரலாற்றை நீங்கள் உருவாக்க வேண்டும்.
அதற்கு, அதை உள்வாங்கிப் பக்குவமாக, மிகப்பணிவாக ஒரு முதலமைச்சருடைய மகன், ஒரு நாட்டுடைய துணை முதலமைச்சர், ஒரு மாபெரும் இயக்கத்துடைய லட்சோப லட்சம் இளைஞர்களைத் தன்னகத்தே கொண்ட ஒரு இளைஞரணியினுடைய செயலாளர்… துளியும் தலைக்கனம் இல்லாத ஒரு துணை முதலமைச்சரைத் தந்திருக்கிறீங்க. லட்சோப லட்சம் மாணவர்கள் சிரித்த முகத்தோடு ‘உதயண்ணா உதயண்ணா’ன்னு கூப்பிடுறாங்க… அவங்க வளர்ப்பு, உங்க வளர்ப்பு, அந்தத் தலைமைப் பண்பு என்பது இயற்கையாகவே அந்த ஜீன்ல இருந்து ஊறி வந்திருக்கு.
மிகப்பணிவாக ஒரு முதலமைச்சருடைய மகன், ஒரு நாட்டுடைய துணை முதலமைச்சர், ஒரு மாபெரும் இயக்கத்தினுடைய லட்சோபலட்ச இளைஞர்களை தன்னகத்தேக் கொண்ட ஒரு இளைஞரணியினுடைய செயலாளர், நீங்கள் வகித்த பதவி வகிக்கின்றீர்கள் என்கிற துளியும் தலைக்கணம் இல்லாத ஒரு இந்த நாட்டுடைய துணை முதலமைச்சரைப் பெற்றிருக்கின்றோம். தந்திருக்கிறீங்க. நான் நேற்றைக்குப் பேசும் போதே சொன்னேன், நான் உதய அவர்களை உதயநிதி என்று பல இடங்களில் பேசியிருக்கிறேன். இன்னைக்கு அப்படிப் பேசுவது கூட ஒருவேளை நாம் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது என்று நினைச்சேன். ஆனா இன்னைக்கு லட்சோபலட்ச மாணவர்கள் சாதாரணக் குக்கிராமத்தில் பிறந்து ஏழை எளிய தாழ்த்தப்பட்ட குடிசையில் பிறந்த குழந்தைச் செல்வங்கள் கூட இன்றைக்கு உலகளாவிய சாதனையாளர்களாக வந்து இவர்களுடைய கரங்களால் பரிசு வாங்கும்போது சிரித்த முகத்தோட உதயண்ணா உதயண்ணான்னு குழந்தைச் செல்வங்கள் கூப்பிடுது. அதுல நான் கூப்பிடுறதுல கூடத் தப்பில்லை என்று நான் என்னைத் தேற்றிக்கொண்டேன்.
நான் எதற்காக இதைச் சொல்கிறேன் என்று சொன்னால், உங்களுடைய தலைவர் கலைஞரின் வளர்ப்பு, உங்களுடைய வளர்ப்பு அப்படி ஒரு தலைமைப் பண்பு என்பது அது இயற்கையாகவே அந்தத் தலைமையிலே அந்த ஜீனிலிருந்து அப்படியே ஊறி வந்திருக்கிறது. நான் சண்டை போட்டிருக்கிறேன்.. பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து எப்படியெல்லாம் போரிட்டு இருப்பேன் எப்படியெல்லாம் சண்டை போட்டிருப்பேன்னு எனக்குத் தெரியும். அம்மையார் ஜெயலலிதா அவர்களை 11 முறை உட்கார உட்கார எழுந்திரிக்க எழுந்திரிக்க ஒருமுறை பதிலடி கொடுத்தேன். பேசி முடிச்ச உடனே என்னைக் கட்டிப் பிடிச்சு நீ வேல்முருகன் இல்லைய்யா நீ தூள் முருகன் அப்படின்னாரு கலைஞர். எனக்கு எப்பவுமே இந்த உதடு கொஞ்சம் சிவப்பா இருக்கும். ஒரு நாள் கார்ல போகும்போது வழியனுப்பப் போகும்போது கிட்ட கூப்பிட்டாரு. இந்த உதட்டைப் பார்த்துட்டு என்னய்யா லிப்ஸ்டிக் போட்டு வந்தியா அப்படின்னாரு. இல்ல தலைவரே இது இயற்கையானதுன்னேன். அதனால எந்த எவ்வளவுதான் எதிர் வரிசையில் நின்று நாம் விமர்சனம் செய்தாலும் சொற்போர் செய்தாலும் கூட அதை மிக லாகவமாகத் தனக்காகத் தனதாக்கிக் கொள்கிற ஒரு மகத்தான தலைவன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
அந்த வழித்தோன்றல்களாக வார்த்தெடுக்கின்ற ஒவ்வொரு தலைவர்களும் நாங்க இங்க கூடப் பார்க்கிறோம். உங்களுடைய ஆக்சுவலா நீங்க கொடுத்த ஃப்ரீடம் தான் தளபதி. நான் பார்க்கிறேன் அங்க அண்ணா திமுகவின் எடப்பாடியிலிருந்து அத்தனை முன்னாள் அமைச்சர்களும் நம்முடைய அமைச்சர்கள் எம்எல்ஏக்களுடன் கைகுலுக்கி நட்பு பாராட்டி நீங்க வர்றதுக்கு முன்னாடி இங்க வந்து பேசுற இந்த வரலாறு இருக்கு பாருங்க இது தமிழ்ச் சமூகத்திற்குத் தேவை. வாழ்கின்ற காலம் கொஞ்ச காலம். ஆனால் அரசியலா மக்களை நாம் சந்திக்கிறோம், தேர்தலுக்கு வரோம். ஆனால் இங்கே எதிரும் புதிருமாக இருக்கிறது அம்மையார் ஜெயலலிதா இருக்கும்போது பார்த்தாலே முடிஞ்சு போச்சு மறுநாள் பதவி காலி. அந்த ஒரு ஃப்ரீடம், இன்னைக்கு எ.வ. வேலு அண்ணன் கிட்ட தங்கம் தென்னரசு அண்ணா உட்பட பலரிடம் பார்க்கிறேன்…எடப்பாடி பழனிசாமியைத் தவிர அத்தனை பேரும் வந்துட்டாங்க இங்க. லாபியில் அத்தனை பேரும் வர்றாங்க பேசுறாங்க கைகுலுக்கிறாங்க அன்பு பாராட்டுகிறார்கள் நட்பு நலம் விசாரிக்கிறார்கள். இந்த மாண்பை உங்களுடைய காலத்தில் உருவாக்கித் தந்திருக்கிறீர்கள். அந்த மாண்பைக் கடைபிடிக்கிற அமைச்சர் பெருமக்களையோ எம்எல்ஏக்களையோ மாவட்டக் கழகச் செயலாளரையோ ஒருபோதும் நீங்களோ துணை முதலமைச்சரோ கடிந்து கொள்ளவில்லை. அதையும் நான் எண்ணிப் பார்க்கிறேன்.
பண்பட்ட திராவிட இயக்கம்
ஆக இந்தப் பண்பட்ட திராவிட இயக்கத்தினுடைய வழித்தோன்றல்கள் இந்தத் தமிழ் நிலத்திற்குரிய பண்பட்ட ஒரு அரசியலை வளர்த்தெடுப்பதற்காகவே திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற இந்த மகத்தான பேரியக்கம் இந்த அரசியலைத் தளபதிக்குப் பின்னால் நம்முடைய இளைஞரணி துணை முதலமைச்சர் அவர்களும் ஏனைய மூத்த அமைச்சர் பெருமக்களும் இன்றைக்குக் கடைபிடிப்பது என்பதும் உண்மையிலேயே இன்றைக்கு மனநிறைவாக இருக்கிறது.
தொழிலாளர் சட்டம் கொண்டு வந்த போது, ஒற்றை ஆளாப் போய் தளபதிகிட்ட சொன்னேன். மறுநாளே கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எல்லாரும் போய் சொன்னோம் உடனடியாக ரத்து. அந்த எதிர்கட்சிகளுக்கும் உரிய மாண்போடு சொல்ல வேண்டிய நேரத்தில் அதை ஏற்றுக்கொண்டு அதை ரத்து செய்கின்ற அந்த மனப்பக்குவம் தளபதி உங்களைத் தவிர யாருக்கும் அது அமையாது. அதே மாதிரி உயர்கல்வித்துறை அமைச்சர் என்னுடைய ரூம் மேட்ஸ் கோவி. செழியன் அவர்களால் கொண்டுவரப்பட்ட அந்த உயர்கல்வித்துறைக்கான அந்தச் சட்டம் இன்னைக்குத் திரும்பப் பெற்றிருக்கு. அதே மாதிரி கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சொன்ன உடனே அதைக் கேட்டு நடைமுறைப்படுத்துறீங்க பாருங்க இந்த விட்டுக்கொடுப்பு என்பதுதான் விட்டுக்கொடுத்தவர்கள் வீழ்ந்ததாக வரலாறில்லை வாழ்ந்ததாகத்தான் வரலாறு உண்டு.
ஆக உங்கள் சின்னத்தில் நின்று வெற்றி பெற்று இருந்தாலும் எங்களுக்கே ஆலோசனை கூறுகிற இடத்தில் நீங்கள் இருக்கிறீர்களா என்று எடுத்துக்கொள்ளாமல் நீங்கள் அதை அணுகுகின்ற முறை மாண்புமிகு உறுப்பினர் சேகர் பாபு அமைச்சருக்கும் எங்களுடைய துரைமுருகன் அவர்களுக்கும் எங்களுடைய சிவசங்கரன் போன்றவர்களுக்கும் இங்கே நிறைய இடத்தில் பொன்முடி போன்றவோடு நாங்கள் மோதியிருக்கிறோம். நாங்கள் வார்த்தை போர் முட்டியிருக்கிறது. அது இந்த அவையோடு சரி. வெளியே போன பிறகு அவரும் எனக்குப் பரஸ்பரம் வணக்கம் சொல்லுகிறார் நானும் அவருக்கு வணக்கம் சொல்லுகிறேன். இந்தப் பண்பாட்டை உருவாக்கியது திராவிட இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் அதைக் கட்டிக் காத்து வருகிறது. ஆக அந்த வகையில் மனநிறைவாக என்னுடைய இந்தச் சட்டமன்றப் பணிகளை நிறைவு செய்து இதற்குச் சண்டை போட்டாலும் வாய்ப்புக் கொடுத்த எங்களுடைய பேரவைத் தலைவர் துணைத் தலைவர் அவர்களுக்கும் நம்முடைய அரசு கொறடா அவர்களுக்கும் நம்முடைய அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும் அனைத்துச் சட்டமன்றப் கட்சியினுடைய தலைவர்களுக்கும் மாண்புமிகு உறுப்பினர் பெருமக்களுக்கும் பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கும் இந்த அவைக்கும் மீண்டும் ஒரு முறை உங்களைப் போன்ற உழைப்பாளிகள் உங்களைப் போன்று மக்களைக் குறித்துச் சிந்திக்கக் கூடியவர்கள் இந்த வயதிலும் இன்றைக்குத் தமிழ்நாடு முழுவதும் அது எப்படித்தான் சாத்தியமோ தெரியல. அது எப்படித்தான் சாத்தியமோ தெரியல.
முதல் நாள் கன்னியாகுமரி மறுநாள் மதுரை மறுநாள் சென்னை மறுநாள் கொளத்தூர் மறுநாள் திரும்பவும் தேனி என்று இன்றைக்கு முழுக்க முழுக்கத் தமிழ்நாடு முழுவதும் பம்பரமாகச் சுழன்று சுழன்று இந்த மக்களுக்கான திட்டங்களைத் தீட்டி அரசியல் கட்சி மாநாடுகளில் பங்கேற்று இத்தனை கூட்டணிக் கட்சித் தலைவர்களுடைய இன்பம் துன்பம் துயரம் கல்யாணம் சாவு வாழ்வு நல்லது கெட்டது பாராட்டு ஏற்புரை எல்லாவற்றிலும் எல்லாவற்றிலும் பங்கேற்றுத் தமிழ்ச் சமூகத்துக்குப் பணியாற்றிய மிகப்பெரியவர்களைத் தகைசால் தமிழர் விருதுகளைத் தேடிச் சென்று ஒரு முதலமைச்சர் ஒரு அரசியல் கட்சியினுடைய தலைவர்களுடைய வீட்டுக்குச் சென்று மரியாதை செலுத்தி வருவது ஒரு சுற்றுச்சூழலுக்காக ஒருவர் போராடுகிறார் என்று சொன்னால் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் என்று சொன்னால் அவர் சாதாரண நிலையில் இருக்கக்கூடியவர் நம்முடைய நிர்மல் அவருடைய வீட்டுக்குப் போய் அங்கே நீங்கள் விசாரிக்கிற இந்த மாண்பெல்லாம் யாருக்கும் வராது. அது வந்தது தலைவர் கலைஞர் வழி வந்த உங்களுக்கு வந்திருக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாகத் தலைவர் கலைஞர் அவர்கள் எனக்கு அரசு உறுதிமொழி குழுத் தலைவர் பதவி தந்தார். அதே பதவியை மீண்டும் இரண்டு ஆண்டுகள் நம்முடைய தளபதி அவர்கள் எனக்குத் தந்து தமிழ்நாட்டின் 38 மாவட்ட ஆட்சித் தலைவர்களோடு அரசுமுறைப் பயணங்களை மேற்கொண்டு என் சக குழுவினுடைய உறுப்பினர்களோடு வெற்றிகரமாக அந்த ஆய்வு அறிக்கைகளை எல்லாம் இந்தப் பேரவையில் நான் தாக்கல் செய்கின்ற வாய்ப்பை எனக்கு மூன்றாவது முறை வழங்கிய நம்முடைய தளபதி அவர்களுக்கும் இந்த அமைச்சரவைக்கும் துணை முதலமைச்சருக்கும் மீண்டும் ஒருமுறை என் நெஞ்சம் நிறைந்த நன்றியைக் கூறி நிறைவு செய்கிறேன் நன்றி. இந்த இடத்திற்கு வருவதற்கு வாக்கு மூன்றாவது முறை வாக்களித்த என் தொகுதி மக்களுக்கும் அவர்கள் இருக்கும் திசையை நோக்கி வணங்கி நிறைவு செய்கிறேன். இவ்வாறு வேல்முருகன் பேசினார்.
