முதுபெரும் தமிழறிஞர் ‘பெருங்கவிக்கோ’ வா.மு.சேதுராமன் (வயது 91) முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார். வா.மு.சேதுராமன் உடல், தமிழக அரசின் காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது. Vaa.Mu. Sethuraman
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே ஆண்டநாயகபுரத்தில் 1935-ம் ஆண்டு பிறந்தவர். சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். எண்ணற்ற தமிழ் நூல்களையும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கவிதைகளையும் படைத்தவர். தமிழ், தமிழர் நலன் சார்ந்த நிகழ்வுகள், போராட்டங்கள் அனைத்திலும் முறுக்கு மீசையுடன் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் பங்கேற்றவர்.

பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தை நிறுவி தமிழ்ப் பணியாற்றிய பெருங்கவிக்கோவுக்கு திருவள்ளுவர் விருது, கலைமாமணி விருது, சி.பா.ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னையில் முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் ஜூலை 4-ந் தேதி பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் காலமானார். முதல்வர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் நேரில் சென்று பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மேலும் பெருங்கவிக்கோ உடல் தமிழக அரசின் காவல்துறை மரியாதை நல்லடக்கம் செய்யப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல்: பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைந்த செய்தி அறிந்து சொல்லொணாப் பெருந்துயர் என்னை ஆட்கொண்டது. இன்றுகூட முரசொலியில், ‘ஓரணியில் தமிழ்நாட்டின் உரிமைநாட்டுவோம். தமிழர் ஒற்றுமையாய் திரண்டெழுந்தே வலிமைகாட்டுவோம்’ என கவிதை தீட்டியிருந்த அவர் இப்போது நம்மிடையே இல்லை என்பதை சிந்தைஏற்க மறுக்கிறது. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்களும் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்களும் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கவிஞர் வைரமுத்து வெளியிட்ட இரங்கல் கவிதை:
மீசைத் தமிழர் என்று
ஆசைத் தமிழர்களால் அழைக்கப்பட்ட
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்
மறைந்துவிட்டார் என்ற செய்தியால்
நெஞ்சம் ஒருகணம்
நின்று துடித்தது
தன் மொத்த வாழ்க்கையை
முத்தமிழுக்கே காணிக்கையாக்கிய
மாணிக்கத் தமிழர் வா.மு.சேதுராமன்
எண்ணம் சொல் செயல் யாவிலும்
தனித்தமிழையே தாங்கிப்பிடித்தவர்
தமிழுக்காக
நடைப்பயணம் சென்று சென்று
கால்கள் தேய்ந்தாலும்
கொள்கை தேயாத கோமான்
அவரது தமிழ்ப்பணி இதழ்
என் தொடக்ககாலக்
கவிதைகளை வெளியிட்டு
வெளிச்சம் தந்தது என்பதை
நான் நன்றியோடு
நினைத்துப் பார்க்கிறேன்
வளையாத முதுகெலும்பும்
நிலையான கொள்கையும்
சலியாத உழைப்பும்
சரியாத தமிழ்ப் பற்றும்கொண்ட
பாவேந்தர் மரபின்
நல்லதொரு பெருங்கவிஞன்
நம்மைவிட்டு நீங்கிவிட்டார் என்று
பாரதிதாசன் கவிதா மண்டலமே
கண்ணீர் வடிக்கும்
தமிழூட்டி வளர்த்த
அவர் பிள்ளைகளுக்கு
என் ஆழ்ந்த இரங்கல்
ஒரு
வெற்றிடம் உண்டாகிவிட்டது
வா.மு.சேதுராமனின்
தோற்றத்திற்கும் ஏற்றத்திற்கும்
ஈடு கொடுக்கும்
இன்னொரு கவிஞன்
இங்கு இல்லை
போய்வாரும் கவிஞரே!
எங்களோடு
உங்கள் தமிழ் இருக்கும்.