முதுபெரும் கல்வியாளர் வசந்தி தேவி காலமானார்

Published On:

| By Minnambalam Desk

Vasanti Devi Passes Away

தமிழகத்தின் மூத்த கல்வியாளர்களில் ஒருவரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான வசந்தி தேவி அம்மையார் (வயது 87) உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

தமிழகத்தின் கல்வி ஆளுமைகளில் குறிப்பிடத்தக்க வகையில் பணியாற்றி வந்தவர் வசந்தி தேவி. இவருக்கு வயது 87. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 1992 முதல் 1998 வரை பணியாற்றி ஓய்வு பெற்றவர். தொடர்ச்சியாக பொதுக்கல்வி முறையை ஆதரித்து பேசியும், எழுதியும் வந்தார். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக இன்று ஆகஸ்ட் 1-ந் தேதி சென்னையில் காலமானார்.

கல்வியில் தீர்வு தேடியவர்

1938-ம் ஆண்டு திண்டுக்கல்லில் பிறந்த வசந்திதேவி, சென்னை பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார். 1992-1998-ல் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றினார். 2002-2005-ல் தமிழ்நாடு அரசின் மகளிர் ஆணையத்தின் தலைவராக பதவி வகித்தார்.

ADVERTISEMENT

சமூகப்பிரச்சனைகளுக்கு கல்வியில் இருந்து தீர்வு காண வேண்டும் என்பதை தன் வாழ் முழுவதும் வலியுறுத்தி வந்தவர் வசந்தி தேவி. பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தை தொடங்கி கள பணியில் ஈடுபட்டு வந்தார்.

பெண் கல்விக்காகவும், சுதந்திரத்திற்காகவும் தொடர்ந்து இயங்கி வந்தார். கிராமப்புற பெண்களின் நலனுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்தவர். 1980களில் பெண் சிசு கொலைகளை ஆவணப்படுத்தியதில் முக்கிய பங்காற்றியவர்.

ADVERTISEMENT

இவர் இந்திய வளர்ச்சிக்கான சங்கத்தின் தலைவராக பணியாற்றினார். சென்னை வளர்ச்சி ஆராய்சி நிறுவன அறங்காவலர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்.

தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டி

இவர், கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியின் சார்பாக களம் கண்டார். ஆர்.கே. நகரில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வசந்தி தேவி மறைக்கு இரங்கல்

கல்வியாளர் வசந்தி தேவி அம்மையார் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமூக இயக்கங்களின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட இரங்கல் செய்தியில், தமிழ்நாட்டின் தலைசிறந்த கல்வியாளராக, பெண்ணுரிமை போராளியாக, சமூக ஆர்வலராக திகழ்ந்த டாக்டர் வசந்தி தேவி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

டாக்டர் வசந்தி தேவி ராணிமேரிக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியைத் துவக்கி, பின்னர் கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியின் முதல்வராகவும், மனோன்மணியம் சுந்தரனார்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் திறம்பட பணியாற்றிவர். ஆசிரியர் இயக்கம், பெண்கள் இயக்கம், கல்வி உரிமை என பல்துறைகளில் அயராது உழைத்தவர். “பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம்” என்ற அமைப்பை துவக்கி அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை அரசுக்கும் – பொதுமக்களுக்கும் உணர்த்தியவர். தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக பணியாற்றிய காலத்தில் பெண்கள், குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கல்வி சீர்திருத்தத்தில் அயராது பாடுபட்டவர். சர்க்கரை செட்டியாரின் பேத்தியான டாக்டர் வசந்தி தேவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான ஆதரவாளராக விளங்கியவர். இடதுசாரி இயக்கங்களுடன் நெருக்கமாக இருந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டங்களில் தன்னை இணைத்துக் கொண்டு வலுவாக குரலெழுப்பியவர். அவரது மறைவு முற்போக்கு இயக்கங்களுக்கும், கல்வி சார்ந்த அமைப்புகளுக்கும் பேரிழப்பாகும்.

அவரது மறைவால் துயருற்றிருக்கும் அவரது மகன், மகள் மற்றும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கல்வியாளர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share