உதயசங்கரன் பாடகலிங்கம்
சில இடங்களில் சிரிப்பு.. சில இடங்களில் ‘ப்ச்’!
சில நடிகர் நடிகைகளின் பெயர்களை டைட்டிலில் பார்த்தாலே, ‘இந்த படத்திற்கு நம்பிப் போகலாம்’ என்று தோன்றும். அது ஒரு நகைச்சுவைப் படம் என்று அறியும்போது, அந்த நம்பிக்கை பன்மடங்காகும். காரணம், அந்த நடிப்புக்கலைஞர்கள் கடந்த காலத்தில் தந்த திரையனுபவங்கள் தாம்.
அசோக் செல்வன், ஊர்வசி, அழகம்பெருமாள், பகவதி பெருமாள், படவா கோபி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்த ‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’ படத்தின் டீசரும் ட்ரெய்லரும் யூடியூப்பில் வெளியான சில காட்சிகளும் அப்படியொரு நம்பிக்கையை நமக்குத் தந்தது. நிவாஸ் பிரசன்னா இசையில், பாலாஜி கேசவன் இயக்கியுள்ள இப்படம் ரொமான்ஸ் காமெடி வகைமையில் இருக்கும் என்பதை சொல்கிறது டைட்டில். படம் அதற்கேற்ற நிறைவான அனுபவத்தை தியேட்டரில் தருகிறதா?
’அதே’ கதை!
இதுவரை நாம் பார்த்த ‘ரொமான்ஸ் காமெடி’ படங்களின் கதை என்னவாக இருந்திருக்கிறது? எதைப் பற்றியும் கவலைப்படாமல், தன் போக்கில் செயல்படுகிற ஒரு நாயகன். அவருக்கு நாயகியைப் பார்த்த முதல் நொடியில் காதல் வருகிறது.
பிறகு, தான் பார்க்கிற வேலை, குடும்பம், எதிர்கால லட்சியம் அனைத்தையும் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு அந்தப் பெண் பின்னே சுற்றுவார் நாயகன். ’ச்சீ.. ச்சீ..’ என்று முதலில் புறக்கணிக்கும் நாயகி, மெல்ல அவர் பக்கம் திரும்புவார். காதலை இருவரும் பரிமாறிக்கொண்ட பிறகு, திடீரென்று ஒரு பூதம் கிளம்பும். அதுவும் நாயகன் சம்பந்தப்பட்டதாக இருக்கும். அதிலிருந்து தப்பிக்க அவர் சொல்லும் பொய்கள் மேலும் பல சிக்கல்களில் அவரை மாட்டி வைக்கும். அதுவே நாயகிக்கும் அவருக்கும் பிரிவை உண்டாக்கும். இறுதியில், சிக்கல்கள் ஒவ்வொன்றாக விடுபட்டு நாயகன் நாயகி இடையேயான காதல் வலுப்படும்.
கிட்டத்தட்ட இப்படியொரு கதையில் சமகால கமர்ஷியல் சினிமா குறித்த கிண்டல், ஆள் மாறாட்ட நகைச்சுவை, கொஞ்சமாய் இளசுகளை சூடேற்றும் காதல் காட்சிகள், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடும் அளவுக்குச் சுவையான பாடல்கள் என்று நிறைந்திருக்கிறது ‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’.
ஒரு இயக்குனரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றுகிறார் உமாசங்கர். ’தானுண்டு தன் வேலையுண்டு’ என்றிருக்கும் அவர், ஒருநாள் லியோனாவை (அவந்திகா மிஸ்ரா) பார்க்கிறார். பார்த்ததும் காதல் கொள்கிறார். அவர் யார், வீடு எங்கே, காதலர் உண்டா என்பதற்கெல்லாம் பதில் தேடுகிறார். ஒரு நன்னாளில் அவரிடம் தன் காதலையும் சொல்கிறார்.
ஒருகட்டத்தில் இருவரும் தங்களது காதலைப் பரிமாறிக் கொள்கின்றனர். ஆனால், தன்னுடன் பணியாற்றும் தோழிக்கு உமாசங்கர் செய்யும் ஒரு உதவி அவரது காதலுக்குப் பிரச்சனையாக மாறுகிறது. தொடக்கத்தில் அது லியோனாவுக்குத் தெரிகிறது. பின்னர் அது உமாசங்கரின் குடும்பத்தினருக்குத் தெரிய வருகிறது. அந்தப் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க, உமாசங்கரும் அவரது நண்பர்களும் சொல்லும் பொய்கள் பல சிக்கல்களை உருவாக்குகிறது.
அதிலிருந்து உமாசங்கர் தப்பித்தாரா? உண்மையை லியோனாவிடம் தெரிவித்தாரா என்பதைச் சொல்கிறது இப்படத்தின் மீதி.
வழக்கமாக, நாம் இதுவரை பார்த்த காமெடி படங்களில் என்னென்ன காட்சிகள் இருந்தனவோ, அவற்றை ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்தெடுத்தாற்போல் அனுபவத்தைத் தருகிறது இப்படம். படம் முழுக்க நாயகன் பெயரை ‘உமா’ என்றும், நாயகி பெயரை ‘லியோ’ என்றும் அழைக்கின்றன சக பாத்திரங்கள். அதுவே இப்படத்தில் இருக்கும் புதுமையான விஷயம். மற்றபடி, ‘அதே கதை அதே காமெடி’ என்று திரையில் நிறைகிறது ‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’.
நிறைவைத் தரும் நடிப்பு!
திரையில் யதார்த்தமான மனிதராகத் தெரிகிற கலைஞர்களில் ஒருவர் அசோக் செல்வன். அந்த வகையில், எதைப் பற்றியும் பெரிதாகக் கவலைப்படாத ஒரு சமகால இளைஞராக இப்படத்தில் தென்படுகிறார். அவரது ‘காமெடி டைமிங்’ அசத்துகிறது. நாயகி அவந்திகா மிஸ்ராவுக்கு இது எத்தனையாவது படம் என்று தெரியவில்லை. ஆனால், ‘ஒரு கமர்ஷியல் படத்திற்குப் போதுமான நடிப்பு’ என்று சொல்லும் அளவுக்குத் திரையில் வந்து போயிருக்கிறார். அவரது புன்னகை, ‘ஆசை ஆசையாய்’ நாயகி ஷர்மிலியை நினைவூட்டிச் செல்கிறது.
நாயகனின் நண்பனாக, எப்போதும அவருடனே ஒட்டித் திரிகிற பாத்திரத்தில் விஜய் வரதராஜ் நடித்திருக்கிறார்.விஜய் டிவி ‘ஆபிஸ்’ சீரியலின் வழியே அறிமுகமான மதுமிலா, இதில் நாயகனின் தோழியாக வந்து போயிருக்கிறார்.இவர்களது பாத்திரங்கள் படம் முழுக்க வருகின்றன. அதற்கேற்ற நடிப்பை இவர்களும் தந்திருக்கின்றனர். ஊர்வசி, அழகம்பெருமாள் இதில் நாயகனின் பெற்றோராக நடித்திருக்கின்றனர். அவர்களது இத்தனை ஆண்டு கால அனுபவம், சாதாரண காட்சிகளையும் அசாதாரணமானதாக மாற்றியிருக்கிறது.
இது போதாதென்று பகவதி பெருமாள் வேறு பெரிய கிருதா, அடர்த்தியான தலைமுடியுடன் சினிமா ஜுனியர் ஆர்ட்டிஸ்டாக வந்து நம்மைக் கலகலக்க வைக்கிறார்.
ஒரே ஒரு காட்சியில் தோன்றி நம்மைக் கிச்சுகிச்சு மூட்டுகிறார் எம்.எஸ்.பாஸ்கர். இன்னும் படவா கோபி, சோனியா, அவர்களது குழந்தைகளாக நடித்தவர்கள், நாயகியின் தோழிகளாக வருபவர்கள், இயக்குனராக நடித்திருக்கும் பரணிதரன் உட்படப் பலர் இதில் தோன்றியிருக்கின்றனர். அவர்களது நடிப்பில் எந்தக் குறையும் இல்லை. தியேட்டரில் கலகலப்பை ஏற்படுத்துகிற அளவுக்கான கதை இப்படத்தில் இருக்கிறது. ஆனால், அதற்கேற்ற திரைக்கதை அமையவில்லை. முன்பாதி மிகச்சுமாராக இருப்பதால், பின்பாதியில் வரும் சில ‘கிளாசிக் காமெடி’ காட்சிகள் கூட பத்தோடு பதினொன்றாகி விடுகின்றன.
உண்மையைச் சொன்னால், பல காட்சிகள் ‘யூடியூப் வீடியோ’ பார்த்த எபெக்டை தருகின்றன. அதுவே இப்படத்தின் பலவீனம். மற்றபடி, ’லாஜிக் மீறல்களை எல்லாம் யோசிக்கவே கூடாது’ என்பதைப் படத்தின் தொடக்கத்தில் வரும் காட்சிகளின் வழியே கறாராக சொல்லிவிடுகிறார் இயக்குனர் பாலாஜி கேசவன். சில இடங்களில் வசனங்கள் ரசிக்க வைக்கின்றன.
நிவாஸ் பிரசன்னாவின் இசையில் பாடல்கள் ‘ஆஹா’ என்றிருக்கின்றன. பின்னணி இசையில் மனிதர் அசத்தியிருக்கிறார். ஒரே காட்சியில் இடம்பெறும் பல பாத்திரங்களின் ரியாக்ஷன்களுக்கு ஏற்ப அவர் பின்னணி இசை அமைத்திருப்பது வித்தியாசமான அனுபவத்தைத் தருவதோடு, படத்தோடு நமக்கிருக்கும் பிணைப்பை அறுபடாமல் பார்த்துக் கொள்கிறது.
விஜய் டிவியின் ‘அது இது எது’ நிகழ்ச்சியில் வரும் ‘சிரிச்சா போச்சு’ சுற்றில் இருக்கும் விஐபிக்கள் போல, சில காட்சிகளுக்கு தேமேவென்று தியேட்டரில் அமர்ந்திருக்கும் நம்மை ‘கொஞ்சம் சிரிங்க பாஸ்’ என்று கிச்சுகிச்சு மூட்டுகிறது அவரது இசை.
இன்னும் ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா, படத்தொகுப்பாளர் ஜெரோம் ஆலன், கலை இயக்குனர் எஸ்.ஜெயச்சந்திரன் என்று பல தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு இப்படத்தில் அடங்கியிருக்கிறது.
’குடும்பத்தோடு இப்படத்தைப் பார்க்கலாமா’ என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முடியாத வகையில், ஓரிரு முத்தக் காட்சிகள் இதில் இருக்கின்றன. அதேநேரத்தில், நாம் சமீபகாலமாகப் பார்த்துவரும் வெற்றிப்படங்களில் இருந்த ஆபாசமோ, அருவெருப்போ இதில் கிடையாது.
டைட்டிலுக்கு ஏற்ப இதில் ‘காசநோவா’ போல நாயகன் பாத்திரம் திரியவில்லை. அப்பெயருக்கு நியாயம் சேர்க்கும்விதமாகச் சில காட்சிகளை இணைத்திருந்தால், இன்னும் கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கலாம். ‘மைண்ட்லெஸ் காமெடி’ என்று ஆங்கிலத்தில் ஒரு பதம் உண்டல்லவா.. அதற்கேற்ப ஒரு படமாகவே அமைந்திருக்கிறது ‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’.
முன்பாதியில் சில காட்சிகள் சரிவர எழுதப்படாமல் நம்மைச் சோதிப்பது உண்மை. அதனைச் சரிப்படுத்தி, திரைக்கதையை வலுப்படுத்தி, சில பாத்திரங்களின் வார்ப்பை இன்னும் நேர்த்தியாக்கி, இதே படத்தை இன்னும் சிறப்பாகத் தந்திருக்கலாம். அதனைச் செய்யாமல் விட்டிருக்கிறது படக்குழு.
அதனால், சில இடங்களில் சிரிப்பு.. சில இடங்களில் ’ப்ச்’.. என்று நகர்கிறது இப்படம். அதேநேரத்தில், தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சிகளில் இடம்பெறும் அளவுக்குச் சில காட்சிகளை வயிறு வலிக்கச் சிரிக்கும் அளவுக்குத் தந்திருக்கிறது ‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ரூ. 110 கோடியுடன் காத்திருக்கும் பஞ்சாப் அணி… ஐ.பி.எல். ஏலத்தில் என்ன நடக்கும் ?
மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள்… ‘இந்தியா’ கூட்டணிக்கு திருமா எச்சரிக்கை!