தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதியில் மின்கம்பத்தை சாய்த்ததில் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் வனப் பகுதியில் இருந்து அவ்வப்போது காட்டுயானைகள் உலா வருவது வழக்கம். அப்போது யானைகள் அங்கிருக்கும் விளை நிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 25 வயது ஆண் காட்டு யானை ஒன்று வனப்பகுதியில்இருந்து வெளியேறியது. இது தொண்டாமுத்தூர் அடுத்த, குப்பேபாளையம், ராமன் குட்டை என்ற பகுதியில் உள்ள நாகராஜன் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்தது. இன்று அதிகாலையில் தோட்டத்தில் மின்வாரியத்தால் அமைக்கப்பட்ட உயர் மின் அழுத்த கம்பத்தை யானை முட்டித் தள்ளியது.
இதில் கீழே விழுந்த உயர் மின்னழுத்த மின் கம்பி பட்டதில், மின்சாரம் பாய்ந்து காட்டு யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்து விவசாயிகளை அச்சுறுத்தி வந்த ரோலக்ஸ் என்ற காட்டு யானை பிடிக்கப்பட்டு டாப்சிலீப் பகுதிக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை, விவசாய நிலத்திற்குள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
