விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னத்தை அகற்றக் கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட மனுவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் இன்று (செப்டம்பர் 30) பதில் அளித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி அறிமுகப்படுத்தினார். சிவப்பு, மஞ்சள் என இரு வண்ணங்களின் மத்தியில் 2 போர் யானைகள் வாகை மலருடன் அந்தக் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழக பகுஜன் சமாஜ் எதிர்ப்பு!
தவெக கொடிக்கு, தமிழக பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அக்கட்சியின் மாநிலத் தலைவர் பி. ஆனந்தன், பகுஜன் சமாஜ் கொடியில் ஏற்கெனவே யானை சின்னம் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
பின்னர் இதுதொடர்பாக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திலும் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், “எங்களது தேர்தல் சின்னமான யானை சின்னத்தை இந்தியா முழுக்க நாங்கள் கொடியிலும், தேர்தல் சின்னமாகவும் பயன்படுத்தி வருகிறோம். தற்போது தமிழகத்தில் புதிதாக கட்சித் தொடங்கியிருக்கும் விஜய் தனது கொடியை அறிமுகம் செய்தார். அதில், எங்களின் தேசிய அங்கீகாரம் பெற்ற யானை உருவம் இடம்பெற்றுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் எந்த பதிலும், நடவடிக்கையும் விஜய் எடுக்காமல் இருக்கிறார். அரசியல் நாகரீகம் இல்லாமலும், சட்டவிரோதமாக ஒரு அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியின் சின்னத்தை பயன்படுத்திய விஜய் மீது நடவடிக்கை எடுத்து அவரது கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்ற வழிவகை செய்ய வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் இன்று பதில் அளித்துள்ளது.
தேர்தல் ஆணையம் தலையிட முடியாது!
அதில், “கட்சிக் கொடிகள் மற்றும் அதில் இடம்பெறும் சின்னங்கள், உருவங்களுக்கு ஆணையம் எப்போதும் ஒப்புதலோ, அங்கீகாரமோ வழங்குவதில்லை.
தேர்தலின் போது ஒரு கட்சியின் வாக்கு சின்னத்தை மட்டுமே தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.
சின்னங்கள் மற்றும் பெயர்கள் முறையற்ற பயன்பாடு தடுப்புச்சட்டம் 1950ன் விதிக்கு உட்பட்டு, கட்சியின் கொடி மற்றும் சின்னங்களை வடிவமைப்பதை உறுதி செய்ய வேண்டியது அந்தந்த கட்சிகளின் பொறுப்பு.
நடிகர் விஜய்யின் தவெக கட்சி கொடியில் யானை சின்னம் இடம்பெற்ற விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது” என பகுஜன் சமாஜ் கட்சியின் புகாருக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
முன் ஜாமீன் கோரி ஏ.ஆர்.டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனர் மனு!
இந்தியாவில் முதன் முதலில் 100 கோடி வசூல் செய்த ஹீரோவுக்கு தாதா பால்கே விருது!