நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் உள்ள இரட்டை யானை சின்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வ் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார். Elephant Symbol Case
தவெக கட்சியின் கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் என்கிற இளங்கோவன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று பதில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த பதில் மனுவில், பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் கொடிக்கும், தவெக கொடிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை; தவெகவின் கொள்கை, கோட்பாடு தமிழகத்தின் வளர்ச்சிக்கான எதிர்கால திட்டம் ஆகியவற்றை அடிப்படையாக் கொண்டு கட்சியின் கொடி உருவாக்கப்பட்டது.
தவெக கொடி ஒரு கட்சி கொடி மட்டுமல்ல என்றும் தமிழகத்தின் கலாச்சார பெருமை, வரலாற்று பெருமை மற்றும் சமூகத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதே கோரிக்கையுடன் பகுஜன் சமாஜ்வாதி கட்சி தேர்தல் ஆணையத்தை அணுகியது; ஆனால் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆகையால் , பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மனுவை உச்சபட்ச அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.