தொலைபேசி ரகசிய உரையாடல்களை வெளியிட்ட வழக்கில் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக நான்கு வாரத்தில் பதில் அளிக்க சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூன் 13) உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008-ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனர் அலுவலகத்தின் ரகசிய பிரிவில் சிறப்பு உதவியாளராக சவுக்கு சங்கர் பணியாற்றினார். அப்போது சில உரையாடல்களை சவுக்கு சங்கர் திருடி வெளியிட்டதாக சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் காவல்துறை குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறியதாக கூறி, கடந்த 2017-ஆம் ஆண்டு சவுக்கு சங்கரை சென்னை அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்தது. இதனை எதிர்த்து சிபிசிஐடி போலீஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதில், “உரையாடல்களை பதிவு செய்த பென் டிரைவ் சவுக்கு சங்கருக்கு சொந்தமானது. விசாரணை நீதிமன்றம் சாட்சிகளை முழுமையான கவனத்தில் கொள்ள தவறிவிட்டது. எனவே விடுதலையை ரத்து செய்து சவுக்கு சங்கருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி தண்டபானி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி மேல்முறையீட்டு மனு தொடர்பாக நான்கு வாரத்திற்குள் பதிலளிக்க சவுக்கு சங்கருக்கு நீதிபதி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இயற்கை எரிவாயு பேருந்து சேவை: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்!
IND vs USA: சிவம் துபே செய்த செயல்: அப்செட்டான ரோஹித் – என்ன ஆச்சு தெரியுமா?
