மின் கட்டண உயர்வு: மூடப்படும் நிலையில் சேலம் குறு, சிறு நிறுவனங்கள்!

Published On:

| By Selvam

மின் கட்டணம் உயர்த்தப்பட்டு 10 மாதங்கள் முடிவடையாத நிலையில், மீண்டும் உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வால், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்படும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் தொழிற்பேட்டையில் 200-க்கும் மேற்பட்ட குறு,சிறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

ADVERTISEMENT

இங்கு உற்பத்தி செய்யப்படும் உரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதன் மூலம் அந்நிய செலாவணி கிடைக்கிறது. இந்தத் தொழிற்பேட்டையில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில், சொத்து வரி, மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால், தொழிலில் பல்வேறு நெருக்கடி ஏற்பட்டது.

இதை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், கதவடைப்பு உள்ளிட்ட பல போராட்டங்களை உரிமையாளர்கள் நடத்தினர்.

ADVERTISEMENT

ஆனால், மின் கட்டணம் குறைக்கப்படவில்லை. இந்த நிலையில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு, ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தொழில் நிறுவன உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள மேட்டூர் அணை சிறு தொழிலதிபர்கள் சங்கத் தலைவர் மாதப்பன், “கொரோனா தொற்று ஏற்பட்டபோது தொழில் நிறுவனங்கள் பல நெருக்கடியைச் சந்தித்தன. குறிப்பிட்ட எண்ணிக்கையில் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன.

மூலப்பொருட்களின் விலை உயர்வு, ஜிஎஸ்டி, வாடகை உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்த நிலையில், சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்டவையால் குறு, சிறு நிறுவனங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசு கடந்த செப்டம்பர் மாதம் மின் கட்டணத்தை உயர்த்தியது. குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு உச்ச பயன்பாடு நேர மின் கட்டணம் முதலில் இல்லை. சமீபத்தில்தான் அமல்படுத்தப்பட்டது.

அதேபோல, நிலை கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நிலை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

உச்சபட்ச நேர மின் பயன்பாட்டுக்கு காலை, மாலை என தலா 4 மணி நேரத்துக்கு 25 சதவிகிதம் அதிகரித்துள்ளதால் குறு,சிறு தொழில் நிறுவனங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், மின் கட்டணம் உயர்த்தப்பட்டு 10 மாதங்கள் முடிவடையாத நிலையில், மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது.

தற்போது, ஜிஎஸ்டி, மூலப்பொருள் விலை உயர்வு உள்ளிட்ட நெருக்கடிக்கு மத்தியில் மின் கட்டணத்தை உயர்த்தினால் தொழில் நிறுவனங்களை மூடும் நிலை ஏற்படும்.

எனவே, மின் கட்டண உயர்வு, நிலை கட்டண உயர்வு, உச்சபட்ச மின் பயன்பாட்டு நேர மின் கட்டணம் ஆகியவற்றில் இருந்து குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ராஜ்

ஆன்லைன் கடன் செயலி: சைலேந்திர பாபு எச்சரிக்கை!

ஐசியுவிலிருந்து தனி அறைக்குச் செந்தில் பாலாஜி மாற்றம்!

Electricity tariff increase
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share