மின்சார வாகன விற்பனை மே மாதம் அதிரடி உயர்வு: யார் முதலிடம் தெரியுமா?

Published On:

| By Santhosh Raj Saravanan

இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேவேளையில், மின்சாரப் பயணிகள் கார்களின் விற்பனையிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு மே மாதத்தில் மின்சாரப் பயணிகள் கார்களின் விற்பனை 81.2 சதவீதம் என்ற பெரும் வளர்ச்சியுடன் 26,682 அலகுகளை எட்டியது. ஆனால், கடந்த ஆண்டின் மே மாதத்தில் 14,725 மின்சாரப் பயணிகள் கார்கள் மட்டுமே விற்பனையாகின. மின்சார வாகனங்களின் விற்பனை தொடர்பான முக்கிய புள்ளி விவரங்களை ‘ஃபெடரேஷன் ஆஃப் ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன்’ (FADA) வெளியிட்டது.

டாடா தொடர்ந்து முன்னிலை

ADVERTISEMENT

மின்சாரப் பயணிகள் கார்களை விற்பனை செய்வதில் டாடா மோட்டார்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த மாதம் இந்நிறுவனத்தின் விற்பனை இருமடங்கு உயர்ந்து 10,340 அலகுகளை எட்டியதாக FADA தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் டாடா மோட்டார்ஸ் 5,083 மின்சார வாகனங்களை விற்பனை செய்திருந்தது.

மஹிந்திரா விற்பனை அதிகரிப்பு

ADVERTISEMENT

டாடாவுக்கு அடுத்தபடியாக, மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் மே மாதத்தில் 6,210 மின்சார கார்களை விற்பனை செய்து பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மே மாதத்தில் மஹிந்திரா 114.8 சதவீதம் அதிக வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு மே மாதத்தில் 2,891 மின்சார வாகனங்களை விற்பனை செய்திருந்தது. 

இப்பட்டியலில் JSW MG மோட்டார் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளதாக FADA தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் மே மாதத்தில் 4,984 மின்சார வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டு மே மாதத்தில் இந்நிறுவனம் 4,599 மின்சார வாகனங்களை விற்பனை செய்திருந்தது.

ADVERTISEMENT

டிவிஎஸ் தொடர்ந்து ஆதிக்கம்

மின்சார இருசக்கர வாகனப் பிரிவில், மே மாதத்தில் மொத்த வாகன விற்பனை 62.76 சதவீதம் அதிகரித்து 1,70,733 அலகுகளாக உயர்ந்தது. கடந்த ஆண்டு மே மாதத்தில் மொத்தம் 1,04,896 மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனையாகின. இந்த ஆண்டு மே மாதத்தில், அதிக மின்சார இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் டிவிஎஸ் மோட்டார் முதலிடம் பிடித்தது. இந்த ஆண்டு மே மாதத்தில் டிவிஎஸ் நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகன விற்பனை 64.54 சதவீதம் அதிகரித்து 42,459 அலகுகளாக உயர்ந்தது. கடந்த ஆண்டு மே மாதத்தில் டிவிஎஸ் 25,804 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்தது.

பஜாஜ் ஆட்டோ இரண்டாம் இடத்திலும், ஏதர் எனர்ஜி (Ather Energy) மூன்றாம் இடத்திலும் உள்ளன. FADA-வின் தரவுகளின்படி, மே மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான மின்சார இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) இரண்டாவது இடத்தைப் பிடித்தது. பஜாஜ் நிறுவனம் மே மாதத்தில் மொத்தம் 39,202 வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டு மே மாதத்தில் இந்நிறுவனம் 22,642 மின்சார இருசக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்தது. டிவிஎஸ் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக 28,240 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த ஏதர் எனர்ஜி நிறுவனம் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு மே மாதத்தில் 14,101 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்தது.

மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை

கடந்த மாதத்தில் மின்சார மூன்று சக்கர வாகனங்களின் மொத்த சில்லறை விற்பனை 71,867 அலகுகளாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் 66,185 அலகுகளாக இருந்தது. மே மாதத்தில் மின்சார வணிக வாகனங்களின் மொத்த விற்பனை 2,400 அலகுகளாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் 1,094 அலகுகளாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share