தேர்தல் பத்திரம் மூலம் பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானது என்று கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதன்படி அரசியல் கட்சிகளுக்கு எந்தெந்த நிறுவனத்தினர் எவ்வளவு நன்கொடை கொடுத்துள்ளனர் என்ற விவரத்தை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டது.
இதையடுத்து தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு அதிக நன்கொடைகள் கிடைத்திருப்பது தெரியவந்தது. குறிப்பாக அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளால் சோதனைக்கு ஆளான நிறுவனங்கள் பாஜகவுக்கு நன்கொடை வழங்கி இருப்பதாக இந்த தரவுகள் கூறின.
தேர்தல் பத்திரம் நடைமுறைப்படுத்த மத்திய நிதி அமைச்சகம் தான் முக்கிய காரணம். இந்த நடைமுறையை கொண்டு வந்தது மத்திய நிதி அமைச்சகம் தான்.
இதனால் தேர்தல் பத்திரம் முறைகேடு தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகார சங்கர்ஷ பரிஷத் என்ற அமைப்பு சார்பில் ஆதர்ஷ் அய்யர் பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் தன்னை அச்சுறுத்தி பணம் பறிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா, அமலாக்கத் துறை அதிகாரிகள் கர்நாடகா பாஜக தலைவர்கள் நளின்குமார், விஜயேந்திரா உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை நேற்று (செப்டம்பர் 27) பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது.
இந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜகவினருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய திலக்நகர் காவல் துறையினருக்கு உத்தரவிட்டது.
அந்த எஃப்ஐஆர்-ஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது பெங்களூர் சிறப்பு நீதிமன்றம்.
நிர்மலா சீதாராமன் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது தொடர்பாக பேசியுள்ள கர்நாடகா முதல்வர் சித்தராமையா, “நிர்மலா சீதாராமன் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்படவுள்ளது. அவர் தனது பதவியை ராஜினாமா செய்வாரா? நிர்மலா சீதாராமனும் குமாரசாமியும் ராஜினாமா செய்தால் அதன் பிறகு நான் ராஜினாமா செய்வது பற்றி யோசிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
முடா வழக்கில் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை பதவி விலக வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சிறையில் ஒவ்வொரு நொடியும் உங்களையே நினைத்திருந்தேன்: செந்தில் பாலாஜி உருக்கமான பதிவு!
Comments are closed.