2018-ம் ஆண்டு பாஜக அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட தேர்தல் பத்திரங்கள் திட்டத்தினை உச்சநீதிமன்றம், ‘சட்டத்திற்கு எதிரானது’ என்று சொல்லி ரத்து செய்தது. இது நாடு முழுக்க பல்வேறு விவாதங்களை உருவாக்கி உள்ளது.
இதுகுறித்து எந்தெந்த கட்சிகள் என்னென்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.
பாஜக
பாஜக சார்பில் முன்னாள் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “தேர்தல் பத்திரங்கள் திட்டம் கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக கொண்டுவந்த திட்டம்” என்ற வாதத்தினையே மீண்டும் வைத்துள்ளார்.
அதேசமயம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை மதிப்பதாகவும் கூறியுள்ளார். “தேர்தலில் பணம் புழங்குவதை சீர்திருத்துவதற்காகவே பிரதமர் மோடி இத்திட்டத்தினை கொண்டுவந்தார். இது தேர்தல்கள் வெளிப்படைத்தன்மையோடு நடைபெறுவதற்காக கொண்டுவரப்பட்ட மிக முக்கியமான திட்டம்” என்று தேர்தல் பத்திரங்களை ஆதரித்தே பேசியுள்ளார்.
காங்கிரஸ்
லஞ்சம் வாங்கவும் கமிஷன் வாங்கவும் தேர்தல் பத்திரங்களை ஒரு மீடியமாக வைத்திருந்தது பாஜக. தற்போது அது நீதிமன்றத்திலேயே நிரூபணமாகிவிட்டது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ”தேர்தல் பத்திரங்கள் நிறைவேற்றப்பட்ட அன்றே அது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று காங்கிரஸ் கட்சி சொன்னது. எங்களின் 2019 தேர்தல் அறிக்கையிலும் இதனை நீக்குவோம் என்று தெரிவித்திருந்தோம். கருப்புப் பணத்தை மாற்றும் மோடி அரசின் இத்திட்டத்தினை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததை வரவேற்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
திமுக
தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், “தேர்தல் பத்திரங்கள் அரசியல் சாசனத்திற்கு எதிரானவை என்று மிகச்சரியான தீர்ப்பினை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது. தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மையையும், இந்த அமைப்பின் மீதான நம்பகத்தன்மையையும் இது உறுதி செய்யும். இந்த தீர்ப்பு ஜனநாயகத்தையும், அனைத்து அரசியல் கட்சிகளுக்குமான சீரான போட்டிக் களத்தினையும் மீட்டெடுத்துள்ளது. பொதுமக்கள் இந்த அமைப்பின் மீது கொண்டிருந்த நம்பிக்கையையும் உறுதி செய்துள்ளது.” என்று பதிவிட்டுள்ளார்.
அதிமுக
தேர்தல் பத்திரம் ரத்து என்ற உச்சநீதிமன்றம் தீர்ப்பை அதிமுக நிச்சயமாக வரவேற்கிறது என்று தெரிவித்துள்ள அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “இப்படி தடுத்தால் தான் எங்களை போன்றவர்கள் கட்சி நடத்துவதற்கு வாய்ப்பு கிடைக்கும். அதாவது, இதுபோன்று பத்திரங்கள் மூலம் நிதி திரட்டி எங்களை போன்ற கட்சிகளை நசுக்கிறார்கள், ஒடுக்குகிறார்கள்” என தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிருந்தா காரத், “ஆளுங்கட்சியானது பெரிய அளவிலான பணத்தினை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்று அதனை 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பயன்படுத்தியுள்ளது. அரசியல் ரீதியான ஊழலை சட்டப்பூர்வமாக்கிய பாஜக அரசாங்கத்தின் செயலை இந்த தீர்ப்பு கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. கார்ப்பரேட்டுகளிடமிருந்து பெற்ற பணத்திற்கும், அதற்காக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக உருவாக்கிய கொள்கைகளுக்கு பாஜக அரசு மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்” என்று கூறியுள்ளார்.
சமாஜ்வாதி கட்சி
“தேர்தல் பத்திரங்கள் சட்டத்திற்கு புறம்பானவை. அவை உடனடியாக ஒழிக்கப்படும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயகத்தின் மறுமலர்ச்சிக்கு முக்கியமானதாக இருக்கிறது. பாஜகவின் சட்டவிரோத கொள்கைகள் இப்போது அம்பலமாகியுள்ளது. மேலும் பாஜகவிற்கும் ஊழலுக்கும் உள்ள பிணைப்பு இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும் பி.எம்.கேர் நிதிக்கு அளிக்கப்பட்ட நிதி மற்றும் வேறு பல வழிகளில் பாஜக பெற்ற நிதிகளையும் வெளியிட வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. கடைக்காரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் வரி செலுத்துவோர் என அனைவரிடமும் கடந்த 10 ஆண்டுகளின் நிதிக் கணக்குகளை கேட்கும்போது பாஜகவிடம் ஏன் கேட்கக் கூடாது?” என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
சிவசேனா (உத்தவ் தாக்கரே) பிரிவு
“ஒரு சட்டவிரோதமான திட்டம் நீதிமன்றத்தினால் நீக்கப்பட்டுள்ளது. இனி இதேபோல் இங்கு உள்ள அரசியல் சாசனத்திற்கு புறம்பான ஆட்சியும் நீக்கப்படும் என்று மகாராஷ்டிரா நம்புகிறது. இதனை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன்” என்று சிவசேனா (உத்தவ் தாக்கரே) பிரிவின் பேச்சாளரான ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சி
பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் இத்தீர்ப்பினை வரவேற்றுள்ளார். இத்தீர்ப்பு வரலாற்றில் முக்கியமானது என்றும், மேலும் தேர்தல் பத்திரங்களைப் பயன்படுத்தி ஆந்திராவின் ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பெற்ற நிதி குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி
ஆம் ஆத்மி கட்சியும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை வரவேற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி அமைச்சர் அதிஷி, “யார் எந்த கட்சிக்கு பணம் கொடுக்கிறார்கள் என்பது வெளிப்படைத்தன்மையோடு இருப்பது ஜனநாயகத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். எந்த கட்சி எங்கிருந்து எவ்வளவு பணத்தை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றது என தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் உச்சநீதிமன்றம் கூறியிருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்” என்று தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பியான சாகேத் கோகலே, “இது வரவேற்கக் கூடிய உத்தரவு என்று தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திரங்கள் திட்டமானது தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு எதிரானதாக இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்திருப்பது மிகப்பெரிய வெற்றியாகும்” என கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி
“உச்சநீதிமன்றத்தின் மகத்தானத் தீர்ப்பை மனதாரப் பாராட்டி வரவேற்கிறோம்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அவர் தனது அறிக்கையில், ”தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்தது மட்டுமின்றி நன்கொடை கொடுப்பவரின் விவரங்களை ரகசியமாக வைத்திருப்பதற்கென வருமானவரிச் சட்டம், ரிசர்வ் வங்கி சட்டம் முதலானவற்றில் பாஜக அரசு செய்த திருத்தங்களையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதன் மூலம் எந்த அரசியல் கட்சிக்கு எந்த நிறுவனம் எவ்வளவு நன்கொடை வழங்கியது என்ற உண்மை இந்திய குடிமக்களுக்குத் தெரியவரும்.
தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்தது மட்டுமின்றி நன்கொடை கொடுப்பவரின் விவரங்களை ரகசியமாக வைத்திருப்பதற்கென வருமானவரிச் சட்டம், ரிசர்வ் வங்கி சட்டம் முதலானவற்றில் பாஜக அரசு செய்த திருத்தங்களையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதன் மூலம் எந்த அரசியல் கட்சிக்கு எந்த நிறுவனம் எவ்வளவு நன்கொடை வழங்கியது என்ற உண்மை இந்திய குடிமக்களுக்குத் தெரியவரும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாமக
தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு மிகச்சரியானது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில், ”தேர்தல் பத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்ட போது, அது குறித்த விவரங்களை கமுக்கமாக வைத்திருக்க வசதியாக வருமானவரி சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் ஆகியவற்றில் செய்யப்பட்ட திருத்தங்களும் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் பணம் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில், அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் நன்கொடையில் வெளிப்படைத் தன்மை அவசியமாகும். அதை உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஓரளவாவது உறுதி செய்யும் என்று நம்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விவேகானந்தன்
INDvsENG : டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த அஸ்வின்