தமிழ்நாடு உட்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல்களுக்கான காங்கிரஸ் கட்சியின் கண்காணிப்புக் குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அஸ்ஸாம் மாநில தேர்தலுக்கான கண்காணிப்புக் குழு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி எம்.பி. தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு ஏப்ரல்- மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையி 5 மாநில சட்டமன்ற தேர்தல்களுக்கான கண்காணிப்புக் குழுக்களின் விவரங்களை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.
கேரளா சட்டமன்ற தேர்தலுக்கு மதுசூதன் மிஸ்திரி தலைமையில் சையத் நசீர் ஹுசைன், நீரஜ் தங்கி, அபிஷேக் தத் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் தேர்தலுக்கு பிரியங்கா காந்தி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் சப்தகிரி சங்கர் உலகா, இம்ரான் மசூத்,சிறிவெல்ல பிரசாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்களுக்கு சத்தீஸ்கர் முன்னாள் துணை முதல்வர் டி.எஸ். சிங் தியோ தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், யசோமதி தாக்கூர், ஜி.சி. சந்திரசேகர், அனில் குமார் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மேற்கு வங்கம் மாநில சட்டமன்ற தேர்தலுக்கு, ஹரிபிரசாத் தலைமையில் முகமது ஜாவேத், மம்தா தேவி, பி.பி. சிங் ஆகியோரைக் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
