ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் முதல் கட்டமாக அனைத்து தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்து விட்டது.
இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், ஏப்ரல் 23ஆம் தேதி முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கிய மக்களவை தொகுதிகளின் வேட்பாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இவர்களோடு அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, ஜெயக்குமார், கோகுல இந்திரா, சட்டப் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் உள்ளிட்டோரும் கலந்து கொண்டார்கள்.
இந்த கூட்டத்தில் என்ன நடந்தது, எடப்பாடி என்ன பேசினார் என்று அதிமுக வட்டாரங்களில் விசாரித்தோம்.
“தேர்தல் நடந்து முடிந்ததுமே பல்வேறு மாவட்ட செயலாளர்களை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எடப்பாடி பழனிச்சாமி நிலவரங்களை கேட்டறிந்தார். இதன் பிறகு சென்னை மற்றும் சுற்றுப்புற தொகுதிகளுக்கான ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டத்தை நேற்று கூட்டினார்.

இந்த கூட்டத்தில் பேசிய பொன்னையன், ’இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பாக தமிழ்நாடு முழுவதும் பரப்புரை செய்த ஒரே ஆளுமையாக இருக்கிறார் நமது பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவில் வேறு யாரும் அவர் அளவுக்கு உழைக்கவில்லை. திமுகவினர் கையில் அட்டைகளை எடுத்து படங்களை காட்டி நமக்கு எதிராக பிரச்சாரம் செய்தபோது… அதே பாணியில் அவர்களுக்கு பதிலடி கொடுத்ததோடு கூடுதலாக மேடையிலேயே வீடியோக்களையும் ஓடவிட்டு பதிலடி கொடுத்தார் பொதுச்செயலாளர் எடப்பாடி. இந்த அணுகுமுறை அதிமுகவுக்கு புதியதாக இருக்கிறது. எடப்பாடியின் இந்த பிரச்சாரத்தை ஐடி விங் சார்பில் இன்னமும் பரவலாக கொண்டு சென்றிருக்க வேண்டும்.
மேலும் வாக்காளர் பட்டியலில் இருந்து கணிசமான வாக்காளர்கள் நீக்கப்பட்டது பெரிய விவாதமாக ஆகி உள்ளது. இது பற்றியும் நாம் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
வேட்பாளர்களில் சிலர் தங்களது தேர்தல் அனுபவம் பற்றி பேசினார்கள். யாரும் யாரையும் பற்றி இந்த கூட்டத்தில் எடப்பாடியிடம் பகிரங்கமாக புகார் தெரிவிக்கவில்லை.
காரணம் என்னவென்றால் ஏற்கனவே ஒவ்வொரு வேட்பாளரும் தனித்தனியாக எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து விட்டனர். அப்போதே தங்களுக்கு எதிராக மாவட்ட செயலாளர்கள் என்னென்ன உள்ளடி வேலைகளை செய்தார்கள் என்று பட்டியல் போட்டு விட்டனர். அதனால் இந்த கூட்டத்தில் அவர்கள் அது பற்றி பேசவில்லை. வாக்காளர் பட்டியலில் பல பெயர்கள் விடுபட்டது பற்றி குறிப்பிட்டார்கள். தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காதது பற்றியும் சிலர் பேசினார்கள்.
வேட்பாளர்களின் தேர்தல் அனுபவத்தை கேட்ட பிறகு பேசிய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘இந்த தேர்தலில் நான் தமிழ்நாடு முழுவதும் சென்று வந்திருக்கிறேன். மக்கள் மாநிலத்தை ஆளுகிற திமுக அரசுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள். இது சட்டமன்ற தேர்தல் அல்ல என்பது நமக்கும் தெரியும். நாடாளுமன்றத் தேர்தல் என்பதால் திமுகவும் மோடியை எதிர்த்தது. நாமும் மோடியை எதிர்த்தோம். நமக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் பற்றியெல்லாம் எனக்கு தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
மாநில அரசுக்கு எதிரான இந்த மக்களின் மனநிலை அடுத்த இரண்டு வருடங்களுக்கு நிச்சயம் அதிகமாகுமே தவிர குறையாது. எனவே 2026 சட்டமன்ற தேர்தலுக்கு நாம் இப்போது இருந்தே தயாராக வேண்டும். யார் யார் என்னென்ன வேலை செய்தார்கள், எப்படியெல்லாம் வேலை செய்தார்கள் என்ற பட்டியலெல்லாம் என்னிடம் இருக்கிறது. அதற்கேற்றபடி நான் தகுந்த நடவடிக்கை எடுப்பேன்’ என்று எச்சரித்துள்ளார் எடப்பாடி.
வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் இப்போது ஏற்பட்டிருக்கிற குளறுபடி வருகிற சட்டமன்றத் தேர்தலில் ஏற்படாதவாறு நாம் மேலும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் பேசியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

எந்தெந்த தொகுதிகளை எதிர்பார்க்கிறார் எடப்பாடி என்று அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, ‘சேலம், கள்ளக்குறிச்சி, பொள்ளாச்சி ஆகிய மூன்று தொகுதிகள் அதிமுகவுக்கு வரும் என்று நம்புகிறார் எடப்பாடி. சேலம் அவரது சொந்தத் தொகுதி. அதனால் சிறப்பு கவனம் எடுத்துக் கொண்டார். அதேபோல அருகே உள்ள கள்ளக்குறிச்சியில் எடப்பாடிக்கு நெருக்கமான குமரகுரு வேட்பாளராக நின்றார். அந்த தொகுதியிலும் அதிமுக பண விநியோகம் அடர்த்தியாக செய்திருக்கிறது. கொங்கு பகுதியில் பொள்ளாச்சி கை கொடுக்கும் என்று நம்புகிறார் எடப்பாடி’ என்கிறார்கள்.
சென்னை மண்டலத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த மண்டல வாரியாக அழைத்துப் பேசுவதா அல்லது ஒட்டுமொத்தமாக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தைக் கூட்டுவதா என்று ஆலோசித்து வருகிறார் எடப்பாடி. எனவே மண்டல வாரியாகவோ அல்லது ஒரே கூட்டமாகவோ தொடர்ந்து நடக்கும் என்றும் அதிமுக நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
CSKvsLSG : சொந்த மைதானத்தில் முதல் தோல்வி… ருதுராஜ் விளக்கம்!
