உறியடி விஜய் குமாரின் அரசியல்… ’எலக்சன்’ டிரைலர் எப்படி..?

Published On:

| By Aara

உறியடி படத்தின் மூலம் ஹீரோவாகவும் இயக்குநராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஜய் குமார்.
சமீபத்தில் விஜய் குமார் நடிப்பில் அறிமுக இயக்குநர் அப்பாஸ் ஏ. ரஹ்மத் இயக்கத்தில் வெளியாகி ஃபைட் கிளப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது விஜயகுமார் நடிப்பில் எலக்சன் என்ற படம் வெளியாக இருக்கிறது.
சேத்து மான் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.
அயோத்தி பட புகழ்,  ப்ரீத்தி ஹஸ்ராணி, ரிச்சா ஜோஷி ஆகிய இருவரும் எலக்சன் படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
பாவெல் நவகீதன், வத்திக்குச்சி திலீபன், ஜார்ஜ் மரியம், நாச்சியாள் சுகந்தி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
பைட் கிளப் படத்தை தயாரித்த ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் தான் எலக்சன் படத்தையும் தயாரித்து இருக்கிறது.
எழுத்தாளர் அழகிய பெரியவன் எலக்சன் படத்திற்கு வசனம் எழுதி இருக்கிறார். மகேந்திரன் ஜெயராஜூ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
வரும் மே 17ஆம் தேதி எலக்சன் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது எலக்சன் படத்தின் டிரைலரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
“வாக்குச்சீட்டு தோட்டாவை விட வலிமையானது” என்று ஆபிரகாம் லிங்கனின் வாக்கியத்துடன் தொடங்கும் எலக்சன் படத்தின் டிரைலரில்,  “தாலி இல்லாம வெளிய போவியா நீ..?  கட்சிக்காரனுக்கு அடையாளமே கரை வேஷ்டியும் துண்டும் தான்”,  “இந்த வாட்டி தலைவர் பதவிக்கு மக்கள்,  தலைவன் மகனுக்கு சப்போர்ட் பண்றாங்களா இல்ல தொண்டன் மகனுக்கு சப்போர்ட் பண்றாங்களான்னு பார்ப்போம்” போன்ற வசனங்கள் கவனத்தை ஈர்க்கிறது.
உள்ளாட்சி தேர்தலில் நடக்கும் அரசியல் போட்டியால் கதாநாயகனின் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. தனது பிரச்சனைகளை தீர்க்க அரசியல் தான் ஒரே வழி என்று முடிவெடுத்து அரசியலில் இறங்கும் கதாநாயகன் சாதி அரசியலுக்கு எதிராகவும், குடும்ப அரசியலுக்கு எதிராகவும் போட்டியிட்டு இறுதியில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதே இந்த படத்தின் ஒன் லைன்.
உள்ளாட்சி தேர்தலை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்கள் மிகவும் குறைவு என்பதினால் விஜய் குமாரின் இந்த எலக்சன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது.
கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share