தேர்தல் நேரத்தில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்குவது குறித்து தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க தமிழக அரசு கடந்த அக்டோபர் மாதம் முடிவு செய்தது. ஆட்சேபனையில்லாத இடங்களுக்கு பட்டாவும், ஆட்சேபனைக்குரிய இடங்களில் வசிப்போருக்கு மாற்று இடமும் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மற்றும் கிராம பஞ்சாயத்துக்குளில் ஆட்பேசனை இல்லாத புறம்போக்கு மற்றும் ஆட்சேபனை உள்ள புறம்போக்கு நிலங்கள் மற்றும் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்கள் தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்த நிலையில் மாவட்டந்தோறும் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கும் நிகழ்வான பட்டா மேளாவை நடத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இதுதொடர்பாக ஸ்டாலின் இன்று (டிசம்பர் 28) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நான்கு ஆண்டுகளாக, டெண்டர் காரியங்களில் மட்டும் கவனம் செலுத்திக்கொண்டு இருந்த முதல்வர் பழனிசாமி, திடீரென்று தேர்தல் அறிவிப்புகளையும், தேர்தல் கால அடிக்கல் நாட்டு விழாக்களையும் நடத்திக் கொண்டிருக்கிறார். மாவட்டங்களில் எல்லாம் பட்டா வழங்கும் மேளா நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறாராம்” என்று தெரிவித்தார்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலாவதற்கு இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில், இது மாதிரி ஒரு கண்துடைப்பு மேளாவை நடத்தத் திட்டமிட்டுள்ளார். அப்படியாவது உண்மையான ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை கிடைக்கப் போகிறதா? லஞ்ச லாவண்யம் கோரத் தாண்டவம் ஆடும் தற்போதைய நிலையில், வீட்டு மனைப் பட்டா அவர்களுக்குக் கிடைக்குமா? அதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என்று சந்தேகம் எழுப்பிய ஸ்டாலின். அதிமுகவினர் கைகாட்டும் நபர்களுக்கு மட்டும் இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் பட்டியல் தயாராகிறதாம் என்ற தகவலைக் குறிப்பிட்டார்.
பெயர் இலவச வீட்டு மனைப் பட்டா. ஆனால் ஒவ்வொரு தாசில்தாரையும் அதிமுகவினர் மிரட்டி, கிராம அளவில் 10 ஆயிரம், 20 ஆயிரம் ரூபாய் என்று வசூல் செய்து கொண்டு, இது போன்ற இலவச வீட்டுமனைப் பட்டாக்களுக்கான பயனாளிகள் தேர்வு நடைபெறுகிறது என்று குற்றம்சாட்டிய ஸ்டாலின், ஆகவே ஆட்சேபணை இல்லாத நிலங்களில் குடியிருப்போருக்கும், ஏழைகளுக்கும் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதில் வெளிப்படைத்தன்மையுடன் அதிமுக அரசு நடந்து கொள்ள வேண்டும் என்று முதல்வருக்கு வலியுறுத்தினார்.
*எழில்*
