வாக்குச்சாவடிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை இனி பொதுமக்கள் பார்வையிட முடியாதபடி தேர்தல் விதிகளை மத்திய அரசு மாற்றியுள்ளது.
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மெஹ்மூத் பிரச்சா என்ற வழக்கறிஞர் ஹரியானா சட்டமன்ற தேர்தல் தொடர்பான சிசிடிவி காட்சிகள், 17-சி படிவம் போன்ற ஆவணங்களை இந்திய தேர்தல் ஆணையம் தனக்கு வழங்குமாறு மனு தாக்கல் செய்திருந்தார்.
இதற்கு ” மெஹ்மூத் பிரச்சா ஹரியானா தேர்தலில் போட்டியிடவும் இல்லை மற்றும் அவர் ஹரியானாவை சேர்ந்தவரும் இல்லை. எதற்காக அவர் இந்த வழக்கை தொடுத்துள்ளார்?” என்று தேர்தல் ஆணைய தரப்பு கேள்வி எழுப்பியிருந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வினோத் பரத்வாஜ், தேர்தல் விதிகள் 1961-க்கு உட்பட்டு சம்பந்தப்பட்ட ஆவணங்களை இந்திய தேர்தல் ஆணையம் மெஹ்மூத் பிரச்சாவிற்கு வழங்கவேண்டும் என்று கடந்த டிசம்பர் 9ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில் தான் தேர்தல் விதிகளின் பிரிவு 93 (2) (a)வில் மத்திய அரசு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
இந்த மாற்றத்தின் படி வாக்குச் சாவடிகளில் எடுக்கப்பட்ட சிசிடிவி வீடியோ போன்ற மின்னணு ஆவணங்களை இனி பொது மக்கள் பார்வையிட முடியாது.
இந்த மாற்றம் குறித்து மெஹ்மூத் பிரச்சா கூறுகையில் ” தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டால் ஒழிய தேர்தல் விதிகளில் மத்திய அரசு இது போன்ற மாற்றங்களை கொண்டுவர முடியாது.
மத்திய அரசு தன்னிச்சையாக இந்த மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. இந்த மாற்றம் தொடர்பாக நான் வழக்கு தொடர இருக்கிறேன்” என்றார்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே ” தேர்தல் விதிகளில் மோடி அரசு செய்திருக்கும் இந்த மாற்றம் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒருமைப்பாட்டை குலைப்பதற்காக திட்டமிட்டு செய்யப்பட்ட ஒன்றாகும்.

முன்னதாக தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் இருந்து இந்திய தலைமை நீதிபதியை மோடி அரசு நீக்கியது. தற்போது இந்த மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.
இதன் மூலம் மோடி அரசு இந்திய அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை நேரடியாக தாக்கியுள்ளது. இவற்றைக் காக்க நாங்கள் (காங்கிரஸ்) நிச்சயம் போராடுவோம்” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
“காற்றில் கணக்கு போட்டு கற்பனையில் கோட்டை கட்டும் பழனிசாமி”… ஸ்டாலின் ஆவேசம்!
“திமுக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போடும் தப்புக் கணக்கு” – ஸ்டாலின் காட்டம்!