சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் பத்மராஜன். இவர் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதுவரை 244 முறை தேர்தலில் போட்டியிட்டு தோற்றுள்ளார்.
தற்போது, 245வது முறையாக வயநாடு இடை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியை எதிர்த்து போட்டியிடுகிறார். இதுவரை, எந்த தேர்தலிலும் வெற்றியும் கண்டதில்லை.
கடந்த 1991 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட தொடங்கினார். முதன் முதலில் முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவை ஆந்திர மாநிலம் நந்தியால் தொகுதியில் எதிர்த்து களம் கண்டார். அங்கு, 500 ஓட்டுகள் வாங்கினார். இவர், அதிகபட்சமாக 6,213 ஓட்டுகள் வாங்கியிருக்கிறார்.
வாஜ்பாய், நரேந்திர மோடி ஜெயலலிதா என அனைத்து தலைவர்களையும் தேர்தல் களத்தில் சந்தித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை எதிர்த்து மட்டும் போட்டியிட இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. டெபாசிட் தொகையாக மட்டும் 1 கோடி இதுவரை செலவழித்துள்ளார். தேர்தல் பிரச்சார செலவுகள் தனி.
கடந்த 40 ஆண்டுகளாக 5 மாநிலங்களில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ள பத்மராஜனை, தேர்தல் மன்னன் என்று சொந்த ஊரில் அழைக்கிறார்கள்.
கடந்த முறை, வயநாட்டில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது, பிரியங்கா காந்தியை எதிர்த்து போட்டியிடும் அவர் இன்று முதல் வயநாட்டில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
பத்மராஜனின் சொந்த மாநிலம் கேரளா என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது தாத்தா கேல் நம்பியார் கண்ணூர் மாவட்டம் பையன்னுரை சேர்ந்தவர். பின்னர், தொழில் காரணமாக மேட்டூருக்கு குடி பெயர்ந்துள்ளனர்.
இவர், மேட்டூரில் டயர் ரீட்ரெடிங் கடை வைத்து நடத்துகிறார். லிம்கா புக்கில் தோல்வி நாயகன் என்ற பெயரில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. தேர்தலில் போட்டியிட்டு இவர் படைத்த சாதனை என்பது இது மட்டும்தான்.
எத்தனை தோல்விகள் வந்தாலும், தன் உடல் ஒத்துழைக்கும் வரை தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுவேன் என்று பத்மராஜன் கூறுகிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
கனடாவில் இந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்!