17-வது துணை ஜனாதிபதி பதவி தேர்தல் வாக்குப் பதிவு தொடக்கம்- முதலில் ஓட்டு போட்ட மோடி

Published On:

| By Mathi

Vice President Election 2025

நாட்டின் 17-வது துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் இன்று செப்டம்பர் 9-ந் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் இன்று மாலை 5 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் திடீரென தமது பதவியை ராஜினாமா செய்ததில் பெரும் சர்ச்சை வெடித்தது. இதனையடுத்து துணை ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அறிவிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இத்தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி வேட்பாளராக உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி ஆகியோர் களம் காண்கின்றனர்.

ADVERTISEMENT

யார் வாக்காளர்கள்?

துணை ஜனாதிபதி தேர்தலில் மக்களவை மற்றும் மாநில்ங்களவை எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிக்க தகுதி உள்ள வாக்காளர்கள்.

ADVERTISEMENT

வாக்குப் பதிவு எப்படி நடைபெறும்?

ரகசிய வாக்குச் சீட்டு முறையில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. வாக்குச் சீட்டில் வேட்பாளர்கள் இருவரது பெயர் இடம் பெற்றிருக்கும்; தங்களுக்கு விருப்பமான வேட்பாளர் பெயருக்கு எதிரே விருப்பத் தேர்வை எம்.பிக்கள் குறிப்பிட வேண்டும்.

ADVERTISEMENT

கட்சி கொறடா உத்தரவு கட்டுப்படுத்துமா?

பொதுவாக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களை கட்டுப்படுத்த கட்சி கொறடா உத்தரவு பிறப்பிக்கப்படும்; இதன்படி கட்சி தலைமையின் முடிவுக்கு எம்.எல்.ஏக்கள் எம்.பிக்கள் கட்டுப்பட்டு இத்தகைய வாக்கெடுப்புகளில் வாக்களிக்க வேண்டும். அதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்; ஆனால் துணை ஜனாதிபதி தேர்தலில் கட்சி கொறடா உத்தரவு என்கிற கட்டுப்பாடு இல்லாமல் எம்.பிக்கள் சுதந்திரமாக வாக்களிக்கலாம்.

மக்களவை, மாநிலங்களவை எம்.பிக்கள் எத்தனை பேர் உள்ளனர்?

543 எம்.பிக்களைக் கொண்ட மக்களவையில் ஒரு இடம் காலியாக உள்ளது; இதனால் மக்களவையில் 542 எம்.பிக்கள் உள்ளனர்.

233 எம்.பிக்களைக் கொண்ட மாநிலங்களவையில் 5 இடங்கள் காலியாக உள்ளன; மேலும் 12 நியமன எம்.பிக்களும் உள்ளனர். இதனால் மாநிலங்களவையில் 228+12 என மொத்தம் 240 எம்.பிக்கள் உள்ளனர்.

இன்றைய துணை ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் 782 எம்.பிக்கள் வாக்களிக்க உள்ளனர்.

துணை ஜனாதிபதி தேர்தலில் வெல்ல எத்தனை வாக்குகள் தேவை?

இந்த தேர்தலில் மொத்தம் 782 பேர் வாக்காளர்கள். இதில் 392 வாக்குகளைப் பெறும் வேட்பாளரே துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

கட்சிகளின் பலம் என்ன?

மக்களவை, மாநிலங்களவையில் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணிக்கு மொத்தம் 422 எம்.பிக்கள் உள்ளனர். இதனால் பாஜக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.

தேர்தலில் கட்சிகளின் முடிவுகள்

இந்த தேர்தலைப் புறக்கணிப்பதாக மொத்தம் 11 எம்.பிக்களைக் கொண்டுள்ள பிஆர்எஸ் (4) மற்றும் பிஜேடி (7) கட்சிகள் அறிவித்துள்ளன.

வாக்கு எண்ணிக்கையும் முடிவு அறிவிப்பும்

துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு முடிவடைந்த உடனேயே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

முதலில் ஓட்டுப் போட்ட மோடி

இன்றைய துணை ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி முதல் நபராக வாக்களித்தார். அவரைத் தொடர்ந்து எம்.பிக்கள் அடுத்தடுத்து வாக்களித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share