எலக்‌ஷன் ஃப்ளாஷ்: நட்டா வருகை… திமுகவுக்கு ஷாக் கொடுக்குமா பாஜக?

Published On:

| By Aara

Election flash: JP Nadda chennai visit

பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வரும் 11 ஆம் தேதி சென்னை வருகிறார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைப் பயணம் சென்னை வருவதை ஒட்டி அதில் கலந்துகொள்கிறார்.

இந்தசூழலில், சென்னையில் ‘என் மண்  என் மக்கள்’ பேரணியை நடத்த பாஜகவுக்கு அனுமதி வழங்க நகர காவல்துறை மறுத்துவிட்டது. ஊர்வலத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

சோழிங்கநல்லூர், பெருங்குடி மற்றும் நந்தனம் ஆகிய மூன்று இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த மாநில பா.ஜ., அனுமதி கோரியது. ஆனால் மாநகர காவல்துறை அனைத்து இடங்களுக்கும் அனுமதி மறுத்தது.

மாநில பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாநகரக் காவல் ஆணையர் மற்றும் போக்குவரத்துக் கூடுதல் ஆணையரை சந்தித்துப் பேசினார். ஆனால், கூட்டத்திற்குப் பிறகு, காவல்துறை அனுமதி மறுத்துவிட்டதாகக் கூறினார். ஊர்வலத்திற்கு அனுமதி கோரி நீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் அவர் கூறினார்.

நட்டா வரும் தினத்தன்று நடைப்பயணத்தில் ஒவ்வொரு எம்பி தொகுதியில் இருந்தும் 100 பேர் வீதம் மொத்தம் 4 ஆயிரம் பேர் அண்ணாமலையோடு  கலந்துகொள்ள வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் டெல்லியில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலரை இணைத்ததைப் போல, நட்டா வரும்போது திமுக, அதிமுக, பாமக கட்சிகளில் இருந்து சுமார் 250 நிர்வாகிகளை பாஜகவில் இணைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதில் திமுகவினர்தான் அதிகம் என்கிறார்கள் பாஜக தரப்பில்.

11 ஆம் தேதி நட்டா கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் வடசென்னை தங்கசாலையில்  நடைபெற உள்ளது. இதற்காக பிரம்மாண்டக் கூட்டத்தை திரட்ட பாஜக தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது.

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

காங்கிரஸ் ஆட்சியில் குடும்பத்திற்கு முக்கியத்துவம்: நிர்மலா சீதாராமன் தாக்கு!

எலக்‌ஷன் ஃப்ளாஷ்: நிர்வாகிகளுக்கு சீமான் சூட்டிய புதிய பட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share