மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 27) பதிலளித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலில் தங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று (மார்ச் 26) தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, “பம்பரம் சின்னம் பொதுச்சின்னம் பட்டியலிலும் இல்லை, அங்கீகரிக்கப்பட்ட சின்னம் பட்டியலிலும் இல்லை. எனவே மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் வழங்குவது குறித்து சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலரே முடிவெடுப்பார்” என்று தேர்தல் ஆணையம் சார்பில் பதிலளிக்கப்பட்டது.
இதை கேட்ட நீதிபதிகள் இன்று (மார்ச் 27) காலை 9 மணிக்குள் முடிவெடுக்கவும், அதுதொடர்பான அறிக்கையை பிற்பகல் 2.15 மணிக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இந்தநிலையில், மதிமுக ஒரே ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடுவதால், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று மதிமுக வழக்கறிஞர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
இந்தநிலையில், பம்பரம் சின்னம் கிடைக்கவில்லை என்றால் தீப்பெட்டி சின்னம் கேட்கும் முடிவில் இருக்கிறார் துரை வைகோ.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…