தமிழக வெற்றிக் கழகத்தை தேர்தல் அரசியலில் பதிவுசெய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளதாக அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று (செப்டம்பர் 8) வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்கிற அடிப்படைக் கோட்பாட்டோடு நாம் அரசியலை அணுகுவதும் ஒருவிதக் கொள்கைக் கொண்டாட்டமே. எனினும் முழுமையான கொண்டாட்டத்திற்காகவும், அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வமானப் பதிவுக்காகவுமே நாம் இதுவரை காத்திருந்தோம். இப்போது அதற்கான அனுமதியும் கிடைத்துவிட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக, கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம். அதைச் சட்டப்பூர்வமாகப் பரிசீலித்த நமது நாட்டின் தேர்தல் ஆணையம், தற்போது நம் தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தல் அரசியலில், பதிவுசெய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற அனுமதி வழங்கி உள்ளது. இதை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
திசைகளை வெல்லப் போவதற்கான முன்னறிவிப்பாக, இப்போது முதற்கதவு நமக்காகத் திறந்திருக்கிறது.
இச்சூழலில், நமது கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள்.
தடைகளைத் தகர்த்தெறிந்து, கொடி உயர்த்தி, கொள்கை தீபம் ஏந்தி, தமிழக மக்களுக்கானத் தலையாய அரசியல் கட்சியாகத் தமிழ்நாட்டில் வலம் வருவோம். வெற்றிக் கொடியேந்தி மக்களைச் சந்திப்போம்” என்று விஜய் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மாநாடு அறிவிப்புக்கு விஜய் காத்திருக்க சொல்வது ஏன்?
முன்னதாக கட்சி மாநாட்டிற்கு அனுமதி கேட்டு கடந்த மாதம் 28ஆம் தேதி அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடிதம் வழங்கினார்.
இதற்கு 33 நிபந்தனைகளுடன் தடையில்லா சான்றிதழை (NOC) வழங்கி தவெக மாநாட்டிற்கு காவல்துறை இன்று அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அதனை அக்கட்சி சார்பில் யாரும் இதுவரை பெறவில்லை.
இதற்கிடையே ஏற்கெனவே அறிவித்தபடி செப்டம்பர் 23ஆம் தேதிக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், முன்னேற்பாடு வேலைகள் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால், முதல் மாநில மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள்” என விஜய் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தவெக கட்சி மாநாட்டை தள்ளி வைக்கிறார் விஜய்?
Paralympics 2024: வெள்ளி வென்ற இந்திய வீரருக்கு தங்கப் பதக்கம் – காரணம் என்ன?
பட்டு வேட்டி சட்டையில் ஸ்டாலின்… சிகாகோ தமிழர்கள் உற்சாக வரவேற்பு!