திருத்தணி ரயில் நிலையத்தில் மேலும் ஒரு முதியவர் மீது தாக்குதல் – அண்ணாமலை கண்டனம்

Published On:

| By Pandeeswari Gurusamy

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையத்தில் வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த பதற்றம் தணிவதற்குள் நேற்று முதியவர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் சென்னையில் இருந்து திருத்தணி சென்ற ரயிலில் பயணித்த வடமாநில இளைஞரை நான்கு சிறுவர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இதில் மூன்று பேர் செங்கல்பட்டு கூர்நோக்கு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு சிறுவன் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இச்சம்பவத்தின் உணர்வு பூர்வ தன்மையை கருத்தில் கொண்டு தாக்குதல் தொடர்பான வீடியோவை சமூக ஊடக தளங்களில் பரப்ப வேண்டாம் என தமிழக அரசு கோரிக்கை வைத்தது. மேலும் அவ்வாறு பரப்புவதால் பொது அமைதி மற்றும் ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் தடுக்கப்படுவதை உறுதி செய்வதற்கான கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசு தெரிவித்திருந்தது.

ADVERTISEMENT

இந்த சம்பவம் குறித்த பதற்றம் முடிவுக்கு வருவதற்கு முன்னரே முதியவர் ஒருவர் திருத்தணி ரயில் நிலையத்தில் நேற்று தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜமால் பாய். புடவை வியாபாரம் செய்து வரும் இவர் நேற்று இரவு திருத்தணி ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஜமால் பாயுடன் அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வம்பு இழுத்தனர். பின்னர் அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. அவரை தாக்கி விட்டு அடையாளம் தெரியாத நபர்கள் தப்பிச் செல்வது குடித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “சூரஜ் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலின் காயங்கள் இன்னும் ஆறாத நிலையிலேயே, நேற்று திருத்தணியில் மேலும் ஒரு வன்முறைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஜமால் என்ற உள்ளூர் வியாபாரி, எந்தவிதத் தூண்டுதலும் காரணமும் இன்றி ஒரு கும்பலால் தாக்கப்பட்டுள்ளார். இது இனி தனிப்பட்ட சம்பவமல்ல. கடந்த சில ஆண்டுகளாக தமிழகமெங்கும் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது, ஒரு அச்சமூட்டும் போக்காக மாறியுள்ளது. சட்டவிரோதச் செயல்கள் சாதாரணமாகி வருகின்றன. குற்றவாளிகள் தைரியமடைகிறார்கள்; சாதாரண மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். திமுக ஆட்சியில் பொதுமக்களின் பாதுகாப்பு முற்றிலும் சீர் குலைந்துள்ளது.

சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் முழுமையான தோல்வியை திமுக எப்போது ஏற்றுக்கொள்ளப்போகிறது. இன்னும் எத்தனை சூரஜ்களும் ஜமால்களும் பாதிக்கப்பட வேண்டும்? என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share