எக்கியர்குப்பத்தில் மரண ஓல சத்தமே இன்னும் அடங்காத நிலையில், சம்பவம் நடந்த மறுநாளே பெண் ஒருவர் சாராயம் விற்றது போலீசாரையே அதிரவைத்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சிக்கு உட்பட்ட எக்கியர்குப்பத்தில் விஷ சாராயம் குடித்ததில் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த மே 13ஆம் தேதி பலர் முண்டியம்பாக்கம், பாண்டி பிம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அன்றைய தினம் இரவே சிகிச்சை பலனின்றி ஜிப்மர் மருத்துவமனையில் 2 பேரும், பிம்ஸ் மருத்துவமனையில் ஒருவரும் என 3 பேர் உயிரிழந்தனர். அதைத்தொடர்ந்து நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
பலர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்படி சிகிச்சை பெறுபவர்களில் பலருக்கு கண் பார்வை பாதிப்பு, சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் செயலிழந்து பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் எக்கியர்குப்பத்தில் திரும்பும் பக்கம் எல்லாம் மரண ஓலம் தான் கேட்கிறது. எக்கியர்குப்பத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க சம்பவம் நடந்த கடந்த 13ஆம் தேதி இரவு முதலே போலீசார் குவிக்கப்பட்டனர். வடக்கு மண்டல ஐஜி கண்ணன், எஸ்பி ஸ்ரீநாதா (தற்போது சஸ்பெண்ட்) உட்பட போலீஸ் அதிகாரிகள் மரக்காணத்தில் குவிந்தனர்.
இவ்வளவு போலீஸுக்கு மத்தியிலும் மரக்காணம் மாரியம்மன் கோயில் வீதியில் சாராயம் விற்ற ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
என்ன நடந்தது என பாதுகாப்பு பணியில் இருக்கும் அதிகாரிகளிடம் விசாரித்தோம்.
“சம்பவம் நடந்த மறுநாள் மே 14ஆம் தேதி, முதலில் இறந்த 3 பேரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு நடந்துகொண்டிருந்தது. உறவினர்கள் மாலை மரியாதை செய்ய வருவதும் போவதுமாக இருந்தனர்.
ஊருக்குள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. இதனால் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் ஊர் மக்களும் போராட்டத்தில் குதித்துவிடுவார்களோ, சாலை மறியலில் ஈடுபடுவார்களோ என போலீசார் மத்தியில் டென்ஷனும் அதிகரித்துக்கொண்டே இருந்தது.
இந்த நிலையில்தான் துக்கத்திற்கு வந்த சிலர் மரக்காணத்தில் பாக்கெட் சாராயம் வாங்கி குடித்தனர். இதைபார்த்த போலீசார் சிலர் ஒடிப் போய் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளிடம் தகவலை சொன்னார்கள்.
“எப்படி சாராயம் கிடைக்கிறது, இங்கு விற்பனை செய்கிறார்களா” என்று உயர் அதிகாரிகளும் அவர்களுக்குப் பின்னால் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐ உள்ளிட்ட போலீசாரும் ஓடினார்கள்.
அப்போது மாரியம்மன் வீதியில் நின்றபடி ஒரு பெண் தனது மடியில் கள்ளச்சாராயம் பாக்கெட்களை வைத்துக்கொண்டு, “இன்னிக்குலாம் சாராயம் கிடைக்காது. வாங்க… வாங்க… ஒரு பாக்கெட் 120 ரூவா” என்று விற்றுக்கொண்டிருந்தார்.
அவரிடம், “ஏம்மா உன் பேர் என்ன? இங்கு நிலைமை எப்படி இருக்கு. இப்படி இருந்தும் நீ மறுபடி சாராயம் வித்துட்டு இருக்கியா” என கண்டித்து உடனடியாக சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
விசாரணையில் அவர் பெயர் கௌரி என்பதும் அந்த பகுதியில் சில்லறை சாராய வியாபாரியாக இருந்து வந்ததும் தெரியவந்தது” என்று கூறினர் போலீசார்.
இவ்வளவு போலீஸ் இருக்கும்போதே கொஞ்சமும் பயம் இல்லாமல். இப்படி தெருவில் நின்று சாராயம் விற்பனை செய்கிறார்களே என்று ஐஜி கண்ணன் வேதனையடைந்ததாக கூறும் போலீசார்,
“மரக்காணம் பகுதியில் சாராயம் விற்பதைப் பிடிக்க முடியாததற்கு காரணம் சாராயம் விற்கும் பகுதி சுமார் ஒரு கிலோ மீட்டர் பரப்பளவுக்கு வெட்ட வெளிச்சமாக இருக்கும், போலீஸ் வருவது அங்கிருப்பவர்களுக்கு தெரியும், போலீஸைப் பார்த்ததும் சாராயத்தைப் போட்டுவிட்டு ஓடிவிடுவார்கள்” என்றார்கள்.
“ஊரே அழிந்தாலும் இந்தப்பகுதியில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கமுடியாது. கள்ளச்சாராயத்தை ஒழிக்க ஒரே ஒரு வழி, நல்ல திறமையான போலீஸ் அதிகாரிகளை இந்த பகுதிக்கு நியமிப்பதுதான்” என்கிறார்கள் எக்கியர்குப்பத்து பெண்கள்.
-வணங்காமுடி
”நன்றாக புரிந்து கொண்டேன்”: ஐஸ்வர்யாவிற்கு ராஷ்மிகா பதில்!
10 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: முழு விபரம்!

