கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் அருகிலுள்ள அருங்குணம் குச்சிப்பாளையம் கிராமத்தில் கெடிலம் ஆற்றில் குளிக்கப் போன 7 பெண்கள் பரிதாபமாக இறந்தது மாவட்டம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அருங்குனம் குச்சிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த குமுதா, நவநிதா , மோனிகா, சங்கவி, பிரியதர்ஷினி, காவியா, திருமதி பிரியா உள்ளிட்டோர் இன்று ஜூன் 5 காலை 11 மணி அளவில் கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்று இருக்கிறார்கள்.
கெடிலம் ஆற்றின் மற்ற பகுதிகளில் தண்ணீர் இல்லாத நிலையில் இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பகுதியில் மட்டும் தண்ணீர் நிரம்பியிருக்கிறது.
அங்கே குளிக்கச் சென்றபோது 12 வயது சிறுமி காவியா மெல்ல மெல்ல இறங்கி ஆழத்துக்கு சென்று விட்டாள். அந்த சிறுமி மூழ்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து பதறிய மற்ற பெண்கள் ஒவ்வொருவராய் அவளை காப்பாற்ற சென்றிருக்கிறார்கள். ஆனால் 15 அடி ஆழமுள்ள அந்த இடத்தில் சிறுமி காவியாவும் சிறுமியை காப்பாற்ற போன மற்ற ஏழு பேரும் பரிதாபமாக தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார்கள்.
இவர்களில் பிரியா மட்டுமே திருமணமானவர். மற்ற ஆறு பேரும் மாணவிகள். தகவல் கிடைத்து அக்கம்பக்கத்தினர் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு போலீஸுக்கும் தகவல் கொடுத்தனர். ஆனால் 8 பேரையும் உடல்களாகவே மீட்க முடிந்தது. கடலூர் மருத்துவமனையில் இந்தப் பெண்களின் உடல்களை கொண்டு வரும்போது அவர்களது உறவினர்களின் கதறல் ஓலம் காண்பவர்களை உலுக்கி விட்டது.
கடலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் மாதவன் நம்மிடம் இது குறித்து பேசும்போது,
“கெடிலம் ஆற்றில் மணல் கொள்ளை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. கடந்த ஆட்சி, இந்த ஆட்சி என்ற பேதமில்லாமல் மணல் கொள்ளையர்கள் ஆற்றின் கனிம வளத்தைக் கொள்ளை அடித்து இருக்கிறார்கள். 15 அடி வரை தோண்டி எடுத்து விட்டு அப்படியே விட்டு சென்று விட்டார்கள். மணல் கொள்ளையர்கள் தோண்டி கொள்ளையடித்த குழியில் தான் தற்போது தண்ணீர் தேங்கி இருக்கிறது. அந்த இடத்தில் குளிக்கச் சென்ற போது தான் ஆழமறியாமல் மூழ்கி அப்பாவி பெண்கள் உயிரை விட்டிருக்கிறார்கள். தமிழக முதல்வர் 5 லட்ச ரூபாய் இழப்பீடு அளித்திருக்கிறார். இது போதாது. அந்த குடும்பங்களுக்கு 10 லட்ச ரூபாயாவது அளிக்க வேண்டும். மணல் கொள்ளையர்களை கடுமையாக ஒடுக்கி நமது கனிம வளங்களை காப்பாற்றினால் தான் இதுபோன்ற உயிர்களையும் காப்பாற்ற முடியும்” என்று வேதனையோடு நம்மிடம் பகிர்ந்து கொண்டார்
**வணங்காமுடி**