மத்திய அரசு பாமாயில் உள்ளிட்ட சமையல் எண்ணெயின் சுங்க வரியை 10 சதவிகிதம் குறைத்துள்ளதால், எண்ணெய் விலை குறைய வாய்ப்புள்ளது.
மத்திய உணவு பாதுகாப்புத் துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா, இதுகுறித்து கூறுகையில், “சமையல் எண்ணெய்களுக்கான சுங்கவரி 20%-லிருந்து 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றும் இது மே 30ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றும்” தெரிவித்துள்ளார்.
இந்தியாவைப் பொறுத்தவரை சமையல் எண்ணெய் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்டுதான் பயன்படுத்தப்படுகிறது.
அதாவது நவம்பர் முதல் அக்டோபர் வரையிலான 2023-24 மார்க்கெட்டிங் நிதியாண்டில், இந்தியா 1.32 லட்சம் கோடி ரூபாய்க்கு சமையல் எண்ணெயை இறக்குமதி செய்திருக்கிறது. அதாவது 156 லட்சம் டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழலில் சுங்கவரியை குறைத்ததன் மூலம் நாட்டில் சோயா, பாமாயில், சூரியகாந்தி ஆகிய எண்ணெய் விலை குறைய வாய்ப்புள்ளது.
கடந்த மார்க்கெட்டிங் நிதி ஆண்டை விட, இந்த மே 28 அன்று பாமாயிலின் சராசரி சில்லறை விலை லிட்டருக்கு 34% உயர்ந்து 134 ரூபாய்க்கு விற்பனையானது.
அதே நேரத்தில் சூரியகாந்தி எண்ணெய் விலை 30% அதிகமாக இருந்தது. சோயா எண்ணெய் உள்நாட்டு சந்தையில் 18% உயர்ந்து லிட்டருக்கு ரூ.147க்கு விற்கப்பட்டது.
கடுகு எண்ணெய் விலை சராசரியாக 25% அதிகரித்து லிட்டருக்கு ரூ.170 க்கும் அதிகமாக இருந்தது.
இது மக்களுக்கு கூடுதல் நிதிச் சுமையாக இருந்த நிலையில் தற்போது சுங்கவரியை மத்திய அரசு குறைத்துள்ளது.