ADVERTISEMENT

வாக்குப்பதிவு குறைவு: ஈபிஎஸ் சொல்லும் காரணம்!

Published On:

| By admin

சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சீர்குலைந்ததால் தான் உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்தது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள் அனைவரும் பங்கேற்றனர். இதில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் குறித்தும், 22ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சென்னை, கோவை மாநகராட்சிகளில் ரவுடிகளும், குண்டர்களும் அதிகளவில் இருந்து கொண்டிருக்கிறார்கள். சென்னை, கோவை மாநகராட்சிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் அதிகளவு வன்முறைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

சென்னை மாநகராட்சியில் பல வார்டுகள் மற்றும் பூத்களில் கள்ள ஓட்டுகளை திமுகவினர் பதிவு செய்துள்ளனர். தோல்வி பயத்தால் வாக்குச்சாவடிகளில் அத்துமீறி உள்ளே நுழைந்து கள்ள ஓட்டை செலுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

சென்னை, கோவை மாநகராட்சிகளிலிருந்த காவல்துறை அதிகாரிகள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுவதைத் தடுக்கவில்லை. போலீசார் கண்முன்னே திமுகவினர் பணப்பட்டுவாடா செய்தனர்.

திருவல்லிக்கேணி தொகுதி 114ஆவது வார்டில் கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது. இதனைப் பலர் செல்போனில் பதிவு செய்தனர். அதில் அதிகாரிகளை மிரட்டுகின்றனர். ‘இங்கு இருக்க மாட்டீர்கள் , இடமாற்றம் செய்யப்படுவீர்கள்’ என்று மிரட்டுகின்றனர். எந்த அளவுக்கு அதிகாரிகளை மிரட்டி கள்ள ஓட்டுக்களைப் பதிவு செய்துள்ளார்கள் என்பதை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கிறேன்” என்று அதுதொடர்பான வீடியோவையும் பத்திரிகையாளருக்குக் காண்பித்தார் எடப்பாடி பழனிசாமி.

ADVERTISEMENT

அந்த வீடியோவில் திமுகவினர் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது பதிவாகியுள்ளது.

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் அச்சமின்றி பொதுமக்கள் வாக்களிக்கும் சூழல் இல்லாத நிலையே திமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ளது. ஜனநாயக படுகொலை நடந்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மீறி திமுகவினர் இவ்வாறு செய்து கொண்டிருக்கின்றனர். தேர்தல் ஆணையம் திமுகவுக்குக் கைப்பாவையாக உள்ளது. எடப்பாடியில் நேற்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளரே சிறைபிடிக்கப்பட்டார். போலீசாருக்கு பாதுகாப்புக்காக ராணுவத்தை அழைக்க வேண்டும் என்ற நிலை தமிழகத்தில் இருக்கிறது.

சென்னையில் வாக்குப்பதிவு குறைந்ததற்குச் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதுதான் காரணம். இந்த தேர்தலைத் தேர்தல் ஆணையம் முறையாக நடத்தவில்லை. 2020 சட்டமன்றத் தேர்தலின் போது சட்டம் ஒழுங்கு சரியாக இருந்ததால் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகமாக இருந்தது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையின் போது ஜனநாயக முறைப்படி அதிகாரிகள் நடந்துகொள்ள வேண்டும். காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கையுடன் இருந்து வாக்கு எண்ணும் பணிக்கு உரியப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share